டெக் நிறுவனங்கள் தொடர்ச்சியாக ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், நெதர்லாந்தை தளமாக கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான பிலிப்ஸ், உலகளவில் 6,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
130 வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட பிலிப்ஸ் நிறுவனம், மின்சார விளக்குகளின் விற்பனையைத் தாண்டி, மருத்துவ உபகரணங்களையும் விற்கும் அளவிற்கு உயர்ந்துள்ளது.
பிலிப்ஸ் நிறுவனம் தயாரித்து விநியோகித்த சுவாச கருவிகளில் (Sleep Respirators) ஏற்பட்ட கோளாறுகளால், அவற்றைத் திரும்ப பெரும் நிலை ஏற்பட்டது. இதனால், 2022-ன் நான்காவது காலாண்டில் 105 மில்லியன் யூரோ இழப்பைச் சந்தித்தது.
கடந்த ஆண்டில் மட்டும் இந்த நிறுவனம் சுமார் 1.6 பில்லியன் யூரோக்கள் வரை இழப்பை எதிர்கொண்டது. இந்நிலையில் இழப்புகளைச் சமாளிக்க ஊழியர்களைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இது குறித்து பிலிப்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராய் ஜேக்கப்ஸ் கூறுகையில், “ஊழியர்களை பணியிலிருந்து நீக்குவது கடினமானது, ஆனால் அவசியமானது. பிலிப்ஸ் மற்றும் அதன் பங்குதாரர்களுக்கு 2022 மிகவும் கடினமான ஆண்டு. உலகம் முழுதும் 6000 ஊழியர்கள் வேலையிலிருந்து நீக்கப்படுவார்கள். 3000 ஊழியர்கள் இந்தாண்டிலும், அடுத்த 3000 நபர்கள் 2025 -க்குள்ளும் நீக்கப்படுவார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.