சென்னை, மாதவரம் சாஸ்திரி நகர் விரிவாக்கம் பகுதியில் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா வசித்து வருகிறார். நடிகர் தாடி பாலாஜியை பிரிந்து நித்யா வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், நித்யாவின் வீட்டின் எதிரில் ஓய்வு பெற்ற ஆசிரியர் மணி என்பவர் வசித்து வருகிறார். நித்யாவுக்கும், மணிக்கும் அடிக்கடி வாய்தகராறு ஏற்பட்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மணி, தன்னுடைய காரை வீட்டின் வெளியில் நிறுத்தி வைத்திருந்தார். அப்போது அவரின் காரை யாரோ சேதப்படுத்தியிருந்ததால் மணி அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து மணி, மாதவரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அப்போது சிசிடிவி கேமரா பதிவு ஒன்றையும் மணி கொடுத்தார். அதில், நித்யா, செல்போன் டார்ச் வெளிச்சத்தில் காரின் அருகில் வருவது போன்ற காட்சி பதிவாகியிருந்தது. அதனடிப்படையில் நித்யா மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரித்தனர்.
இதையடுத்து, நித்யாவை போலீஸார் கைதுசெய்தனர். நித்யா மீது பதிவு செய்யப்பட்ட சட்டப்பிரிவில் காவல் நிலைய ஜாமீனிலேயே அவரை விடுவிக்க முடியும். அதனால் விசாரணைக்குப்பிறகு நித்யா வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இருப்பினும் நித்யா மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடக்கும் போது அவர் ஆஜராக வேண்டும் என்கின்றனர் போலீஸார்.