ராஞ்சி, ஜார்க்கண்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் யானைகள் தாக்கியதில், 462 பேர் பலியாகியுள்ளது, தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாக தெரியவந்துஉள்ளது.
ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, சமீப காலமாக, யானைகளால் பொதுமக்கள் பலியாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இது குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், வழக்கறிஞர்சத்யபிரகாஷ் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:
ஜார்க்கண்டில், 2017ல் துவங்கி, கடந்த ஐந்து ஆண்டுகளில் யானைகள் தாக்கியதில், 462 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 2022ல் மட்டும் 133 பேரும், இதற்கு முந்தைய ஆண்டில் 84 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த மாதம் மட்டும் 65 வயது முதியவர், 2 வயது சிறுவன் உட்பட ஐந்து பேர் பலியாகியுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில், ஒடிசாவில் 499 பேரும், அசாமில் 385 பேரும், மேற்கு வங்கத்தில் 358 பேரும் யானைகள் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு கூறப்பட்டுஉள்ளது.
இது குறித்து வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், ‘வனவிலங்குகளின் வாழ்விடங்கள், நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்படுவதால், அவை ஊருக்குள் புகுந்து ஆபத்தை ஏற்படுத்துகின்றன. இந்நிலை நீடித்தால், வரும் காலங்களில் உயிர்ப்பலி அதிகரிக்கும்’ என்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement