கொடைக்கானல் பகுதியில் டாஸ்மாக் கடை கேட்டு மது பிரியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தனியார் மதுபான கடையில் அதிக விலையில் மது விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கொடைக்கானல் நகரம் மற்றும் மேல்மலை, கீழ்மலை கிராம பகுதிகளில் தமிழக அரசின் மதுபான கடையான டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன.
இதில், பெருமாள் மலை பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைக்கு, மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், சில ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது.
இந்த டாஸ்மாக் கடைக்கு அந்த பகுதி சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் கடை அகற்றப்பட்டது.
இந்த நிலையில், பெருமாள் மலை பகுதியில் தனியார் மதுபான விடுதி செயல்பட்டு வருகிறது. அதில் அதிக விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதால், மது பிரியர்கள் கடும் சிக்கலுக்கு ஆளாகியுள்ளனர்.
இதனையடுத்து இன்று பெருமாள்மலை பகுதியில் மீண்டும் டாஸ்மாக் கடை அமைக்க வலியுறுத்தி மதுபிரியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், தனியார் மதுபான விடுதி செயல்படும் போது, டாஸ்மாக் கடை அமைக்க என்ன பிரச்சனை என்றும் கேள்வி எழுப்பினர்.