புதுடில்லி ‘பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழி பாடத் தேர்வை அனைத்து மாணவர்களும் கட்டாயம் எழுத வேண்டும்’ என, 2016ல் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.
தமிழகத்தில், மொழிவாரி சிறுபான்மையினர் பயிலும் பள்ளிகளில், தமிழ்ப் பாடத்துக்கு பதிலாக, ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது உள்ளிட்ட மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. இந்த மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ்ப் பாடத்துக்கு பதிலாக தாங்கள் பயிலும் மொழித் தேர்வை எழுதி வந்தனர்.
இந்நிலையில், ‘மொழிவாரி சிறுபான்மையினர் பள்ளி உட்பட அனைத்து பள்ளி மாணவர்களும் 10ம் வகுப்பு தேர்வில் தமிழ்ப் பாடத்தை கட்டாயம் எழுத வேண்டும்’ என, தமிழக அரசு 2016ல் அரசாணை பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக மொழிவாரி சிறுபான்மையினர் மன்றம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 2019ல் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதிக்க மறுத்தது.
ஆனால், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ் மொழி தேர்வை எழுத, மொழிவாரி சிறுபான்மையின மாணவர்களுக்கு 2022 வரை விலக்கு அளித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவு 2022ம் ஆண்டுடன் முடிவுக்கு வந்ததை அடுத்து, தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து, தமிழக மொழிவாரி சிறுபான்மையினர் மன்றம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. ‘பிப்., 6ல் விசாரணை துவங்கும்’ என நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement