தமிழில் அறிமுகமாகும் 'சீதா ராமம்' மிருணால் தாக்கூர்! அதுவும் இந்த நடிகருடனா?

மராத்திய மொழிப்படங்களில் நடித்ததன் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கி, பின்னர் பாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கி தற்போது ‘சீதா ராமம்’ படத்தின் மூலம் அனைவரது மனதிலும் சீதா மகாலக்ஷ்மியாக வாழ்ந்து வருபவர் தான் நடிகை மிருணால் தாக்கூர்.  ஹிந்தியில் இவர் நடித்திருந்த தொடர் ஒன்று தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ‘இரு மலர்கள்’ என்கிற பெயரில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.  இந்த தொடரில் அம்மு என்கிற கதாபாத்திரத்தில் துடிப்பாக நடித்து பல ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்திருந்தார்.  நீண்ட நாட்களாக இவரை ரசிகர்கள் மிஸ் செய்து வந்த நிலையில், இவரை ‘சீதா ராமம்’ படத்தில் கண்டதும் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.  கடந்த ஆண்டு வெளியான ‘சீதா ராமம்’ எனும் காதல் காவியத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணால் தாக்கூர் நடித்திருந்தார், இந்த படத்தில் இவரது கெட்டப்பும் நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.  இந்த படத்தின் வெற்றியால் இவருக்கு தற்போது தமிழ் திரையுலகம் கம்பளம் விரித்து வரவேற்கவுள்ளது.

‘சீதா ராமம்’ படத்தின் மூலம் மிருணால் தாக்கூர் பிரபலமானதை தொடர்ந்து, இவருக்கு தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சூர்யாவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.   சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா  தற்போது ‘சூர்யா 42’ படத்தில் நடிக்கிறார், இப்படத்திற்கான அறிவிப்புகள் முன்னரே வெளியானது.  ‘சூர்யா 42’ படமானது பல்வேறு காலகட்டங்களை கொண்ட ஒரு வரலாற்று படமாக உருவாகிறது.  கிட்டத்தட்ட 10 மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படம் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது.  இந்த படம் பல்வேறு காலகட்டங்களில் நடக்கும் கதை என்பதால் இதில் சூர்யா பல சிறப்பான கதாபாத்திரங்களில் தோன்றுவார்.  அதில் ஒரு காதாபாத்திரத்திற்கு மிருணால் தாக்கூர் ஜோடியாக நடிப்பார் என்று கூறப்படுகிறது. 

‘சூர்யா 42’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதத்தில் நடைபெற போகிறது.  படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் மிருணால் தாக்கூர் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல்களை படக்குழு இதுவரை வெளியிடவில்லை.  ‘சூர்யா 42’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் திரையுலகின் பிரபலமான நடிகை திஷா பதானி நடிக்கிறார், இவர் ஏற்கனவே படத்தில் தனக்குள்ள பெரும்பாலான காட்சிகளை நடித்து முடித்துவிட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.  இப்படத்தின் ஒளிப்பதிவாளராக வெற்றி பணிபுரிய, படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.