புதுடெல்லி: தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழித் தேர்வு கட்டாயம் என கடந்த 2016ல் தமிழக அரசு விதிமுறை வகுத்தது. இதை ரத்து செய்யக் கோரியும், மொழிவாரி சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் மொழித் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அரசாணைக்கு தடை விதிக்க மறுத்து, 2022ம் ஆண்டு வரை மொழிவாரி சிறுபான்மை மாணவர்கள் தமிழ்மொழி தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘இந்த விவகாரத்தை நாங்கள் விரிவாக விசாரிக்க விரும்புகிறோம். அதனால் இதுதொடர்பான விசாரணையை வரும் பிப்ரவரி 6ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம். இருப்பினும் 2023ம் ஆண்டு மாணவர்களுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக தமிழக அரசு தங்களது நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்’’ என தெரிவித்தனர்.