கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அடுத்து யாரை இயக்கப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இது குறித்து அவரிடம் பலமுறை கேட்டபோதும் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள் என்று மட்டுமே கூறி வந்தார்.
இந்நிலையில், லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் ‘தளபதி 67’ படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாஸ்டர், வாரிசு ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணைகிறோம். தற்காலிகமாக ‘தளபதி 67’ அழைக்கப்படும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.
கைதி, மாஸ்டர், பீஸ்ட் ஆகிய படங்களின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பிறகு இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தில லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார், தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து வசனம் எழுதியுள்ளனர். விரைவில் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.