திருடனின் கடிதத்தால் மனம் இறங்கிய கடை உரிமையாளர்..! அப்படி என்ன எழுதி இருக்கான் தெரியுமா ?

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சாலேமார் மாவட்டத்தில் உள்ள பனியானா பகுதியில் வசித்து வருபவர் கோமாராம். இவர்அதே ஊரில் இனிப்பு கடை ஒன்றை நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த ஜனவரி 24-ம் தேதி வழக்கம் போல கடையை திறக்க சென்றுள்ளார். அப்போது கடையில் இனிப்புகள் அங்குமிங்கும் சிதறி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அத்துடன் கடை கல்லாவில் பணம் களவு சென்றதை பார்த்தும் திருட்டு நடந்துள்ளது என்பதை புரிந்து கொண்டார்.

அப்போது அங்கு ஒரு கடிதம் தென்பட்டுள்ளது. கடையில் கொள்ளை அடித்த திருடன் உரிமையாளருக்கு இரு பக்கத்தில் கடிதம் எழுதி வைத்து சென்றுள்ளான். அந்த கடிதத்தில், “ஹலோ சார், நான் நல்ல மனசு கொண்டவன். நான் உங்கள் கடைக்கு திருடுவதற்காக நுழையவில்லை. எனது ஆசையை நிறைவேற்ற தான் வந்தேன். நான் சாப்பிட்டு இரண்டு நாள்கள் ஆகிறது. ஒரே பசியாக இருந்ததால், உங்கள் கடைக்கு சாப்பிடத்தான் வந்தேன். பணம் திருட வரவில்லை. நீங்கள் ஏழை என்பதை நான் அறிகிறேன். அதனால் தான் ஆறுதல் கூறுவதற்காக இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

எனது காலில் அடிபட்டுள்ளதால் அதற்கு பணம் தேவைப்படுகிறது. எனவே, உங்கள் கல்லாவில் இருந்த பணத்தையும் நான் எடுத்துக்கொண்டேன். நான் உங்கள் கடையில் அதிகமாக ஒன்றும் சாப்பிடவில்லை. நான்கு பீஸ் இனிப்புகளை தான் சாப்பிட்டேன். சேவ் கிடைக்கும் என்று தேடி பார்த்தேன். அது இல்லை. கடைசியாக ஒன்று சொல்லிக்கொள்கிறேன். நீங்கள் போலீசிடம் புகார் தெரிவிக்க வேண்டாம். ஏன் என்றால் நான் உங்கள் விருந்தாளி.” என்று எழுதியுள்ளான்.

இது குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு அப்பகுதியின் காவல்துறை ஆய்வாளர் அசோக் பெனிவால் வந்துள்ளார். ஆனால் கடித்ததை படித்து பார்த்த பின் கடையின் உரிமையாளர் கோமாராம் போலீசாரிடம் புகார் அளிக்க விருப்பமில்லை எனக் கூறிவிட்டார். அவர் கடையில் இருந்த ரூ.7 ஆயிரம் பணம் மற்றும் இனிப்புகள் திருடப்பட்டுள்ளன. உரிமையாளர் புகார் அளிக்காவிட்டாலும், அந்த திருடனை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.