தி. மலை: திருவண்ணாமலை வடக்கு மாவட்ட விசிக செயலர் பகலவன் 3 மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பகலவனின் செயல் குறித்து விசாரிக்க மாநில அளவில் விசாரணை குழு நியமிக்கப்படும். மக்கள், கட்சி நலனுக்காக கட்டுப்பாடுகளை மீறாமல் செயல்பட வேண்டியது முக்கியமானது என திருமாவளவன் டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இதுக்குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; ‘திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் கட்சியின் நன்மதிப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
உழைக்கும் மக்களின் உரிமைகளை நசுக்கும் காவல்துறை உள்ளிட்ட அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுவது பாராட்டுதலுக்குரியதே. எனினும், கட்சியின் நலன் மற்றும் மக்கள் நலன்களைக் கருத்தில் கொண்டு அவற்றின் அடிப்படையிலான கட்டுப்பாடுகளை மீறாமல் செயலாற்றுவது இன்றியமையாததாகும்.
அவ்வாறின்றி சிலர் பொதுவெளியில் நடந்து கொண்ட போக்குகள் கவலையளிப்பவையாக உள்ளன.எனவே,இதற்கு பொறுப்பேற்க வேண்டிய மாவட்ட செயலாளர் பகலவன் அவர்கள்.மூன்று மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார்.
இது குறித்து முழுமையாக விசாரிப்பதற்கு மாநிலப் பொறுப்பாளர் ஒருவர் தலைமையில் விசாரணைக் குழு பின்னர் நியமிக்கப்படும்’ என திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.