திருவள்ளூர் மாவட்டத்தில் கல்லூரிக்கு செல்லாமல் ஊர் சுற்றியதை தந்தை கண்டித்ததால் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கோபாலபுரம் பகுதியில் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் துளசிதாஸ் (17). திருத்தணி அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று துளசிதாஸ் கல்லூரிக்கு செல்லாமல் ஊர் சுற்றியதால், தந்தை சுந்தரமூர்த்தி அதனை கண்டித்துள்ளார்.
இதனால் மனவேதனையடைந்த துளசிதாஸ் தற்கொலை செய்து கொள்வதற்காக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து உறவினர்கள் துளசிதாசை மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி துளசிதாஸ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதை அடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் துளசிதாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.