சென்னையில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை குட்டையில் விழுந்து உயிரிழந்ததை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை மணலி ஜாகீர் உசேன் தெருவைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. 30 வயதான இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு 5 வயதில் குபேரன் என்ற ஆண் குழந்தை உள்ளது. விஜயலட்சுமி தனது குழந்தையை, பெற்றோரிடம் விட்டுவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். நேற்று மாலை வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை குபேரன், திடீரென மாயமானதைத் தொடர்ந்து, அதிர்ச்சியடைந்த தாத்தா பாட்டி, அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர்.
பின்னர், ஜாகீர் உசேன் தெருவை ஒட்டிய, குட்டை ஒன்றில் குழந்தை ஒன்று விழுந்து கிடப்பதாக தகவலறிந்து அங்கு சென்று பார்த்தபோது, குபேரன் உயிரிழந்த நிலையில் சடலமாக மிதந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் மணலி போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எம்.6 மணலி காவல் நிலைய ஆய்வாளர் சுந்தரம் தலைமையிலான போலீசார், உயிரிழந்த குழந்தையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஐந்து வயது குழந்தை, குட்டையில் விழுந்து இறந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM