மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் தமிழக அரசு அறிவித்தது. இதனை அடுத்து கடந்த நவம்பர் 28ஆம் தேதி முதல் பொதுமக்கள் அனைவரும் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். மின்வாரிய அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோன்று இணையதளம் வாயிலாகவும் பொதுமக்கள் தங்கள் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்து வருகின்றனர். பொதுமக்கள் ஆதார் எண் இணைக்க https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற இணையதள முகவரி அறிமுகம் செய்யப்பட்டது.
கடந்த டிசம்பர் 31ஆம் தேதியுடன் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கால அவகாசம் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் தற்பொழுது வரை 2.26 கோடி நுகர்வோர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க நாளை (ஜன.31) கடைசி நாள் என்பதால் கால அவகாசம் இன்னும் 2 நாட்களே உள்ளது. இந்த நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டதை சரி பார்க்கும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி https://www.tnebltd.gov.in/BillStatus/billstatus.xhtml என்ற இணையதளத்தில் நுகர்வோரின் மின் இணைப்பு எண் மற்றும் மொபைல் எண்ணை பதிவு செய்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளலாம் என தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது.