மத்திய பட்ஜெட் வழக்கமாக பிப்ரவரி மாதம் கடைசி வாரத்தில் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இந்த முறையில் மாற்றம் செய்யப்பட்டு, மத்திய பாஜக ஆட்சிக்கு பிறகு, பொது பட்ஜெட் மற்றும் ரயில்வே பட்ஜெட் இவை இரண்டும் சேர்த்து பிப்ரவரி முதல் வாரத்திலேயே தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஜனவரி கடைசி வாரத்தில் தொடங்கி ஏப்ரல் முதல் வாரம் வரை இரண்டு கட்டங்களாக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி (நாளை) தொடங்குகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நாளை தொடங்கி பிப்ரவரி 13ஆம் தேதி வரையும், இரண்டாவது அமர்வு மார்ச் மாதம் 13ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 6ஆம் தேதி நிறவடைகிறது.
இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன் நாடாளுமன்றம் கூடவுள்ளது. இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 25ஆம் தேதி அவர் திரவுபதி முர்மு பதவியேற்றார். அதன்பின்னர் கூடும் கூட்டத்தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை ஆற்றுவது இதுவே முதல் முறை ஆகும்.
நாளை தொடங்கவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். இந்த அறிக்கை 2022-23 முழு நிதி ஆண்டுக்கான இந்திய பொருளாதாரத்தின் நிலையையும், நிதி வளர்ச்சி, பண மேலாண்மை உள்ளிட்ட எதிர்கால நோக்கங்களை கருத்தில் கொண்டு மதிப்பாய்வு செய்து தாக்கல் செய்யப்படவுள்ளது.
இதையடுத்து, பிப்ரவரி 1ஆம் தேதி காலை 11 மணிக்கு மக்களவையில் 2023-24-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பொது பட்ஜெட்) நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றவுள்ளார். அவர் தாக்கல் செய்யும் 5ஆவது பட்ஜெட் இதுவாகும். பின்னர் மாநிலங்களவையில் மத்திய பட்ஜெட் வைக்கப்படுகிறது. இந்த ஆண்டும் காகிதமில்லா பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்படவுள்ளது.
அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ளதால், பட்ஜெட்டில் பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்வில் சலுகை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் இரு நாட்களில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் கேள்வி நேரமும், பூஜ்ய நேரமும் இடம் பெறாது என தகவல்கள் வெளியாகியுள்ளன. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. இரு அவைகளிலும் நடக்கிற விவாதத்தின் முடிவில், பிரதமர் மோடி பதில் அளித்து பேசுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டி இன்று அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், சுமூகமாக அவையை நடத்துவது, முக்கிய பிரச்சினைகளை எழுப்புவது பற்றி விவாதிக்கப்படும் என தெரிகிறது. இதையடுத்து, பாஜக கூட்டணிக்கட்சி தலைவர்கள் கூட்டமும் நடக்கவுள்ளது. அதில் இரு அவைகளிலும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது பற்றி விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
முன்னதாக, பிரதமர் மோடி மத்திய அமைச்சர்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசித்தார். அதில், பல்வேறு அமைச்சகங்களின் செயல்பாடுகள், மத்திய அரசின் கொள்கை முயற்சிகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அந்த கூட்டத்தின் முடிவில், பல்வேறு அறிவுறுத்தல்களை தனது அமைச்சரவை சகாக்களுக்கு பிரதமர் மோடி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.