பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன், கோவை ஈச்சனாரி கோயிலிலிருந்து பழநி முருகன் கோயிலுக்கு இன்று பாதயாத்திரை தொடங்கியிருக்கிறார். பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை இதில் கலந்துகொண்டு யாத்திரையைத் தொடங்கிவைத்தார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு – காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பணப் பட்டுவாடா குறித்துப் பேசிய வீடியோவை வெளியிட்டிருக்கிறோம்.
அதில் பணப் பட்டுவாடா தொடங்கி, சக அமைச்சரான சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனை நேரு தகாத வார்த்தைகளில் பேசுவது வரை பதிவாகியிருக்கிறது. இது குறித்து நாளை மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கவிருக்கிறோம். அமைச்சர் எ.வ.வேலு நான் அதை எடிட் செய்திருக்கிறேன் எனக் கூறுகிறார். அப்படி நிரூபித்தால் நான் அரசியலைவிட்டு விலகத் தயார். கே.என்.நேரு பேசியது உண்மை என்றால், தமிழக மக்களிடம் முதல்வர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்.
கோயிலை இடித்ததை டி.ஆர்.பாலு பெருமையாகப் பேசுகிறார். டி.ஆர்.பாலு, இளங்கோவன் ஆகியோருக்குச் சவால்விடுகிறேன். சேலத்தில் கோயிலுக்குள் பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த சகோதரர் உள்ளே செல்லும்போது எப்படித் தடுக்கப்பட்டார் என்பதைப் பார்த்தோம். தமிழகம் முழுவதுமே இதுதான் நடக்கிறது. தி.மு.க தொடங்கி 70 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. சமூகநீதியைப் பற்றி இவர்கள் பாடம் எடுக்கிறார்கள். சமூகநீதி பற்றிப் பேச தி.மு.க-வுக்கு என்ன அருகதை இருக்கிறது?
ஈரோடு இடைத்தேர்தலில் ஓரிரு நாள்களில் எங்களின் முடிவைத் தெரிவிப்போம். தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து ஒரு வலுவான வேட்பாளர் நின்று, வெற்றிபெற வேண்டும். அதன் மூலம் தி.மு.க-வின் தோல்வியை உறுதிப்படுத்த வேண்டும். இது பா.ஜ.க பலத்தைப் பரிசோதிக்கும் தேர்தல் அல்ல. 2024 நாடாளுமன்றத் தேர்தல்தான் எங்கள் தேர்தல்.
பிபிசி ஆவணப்படம் ஒரு பொய்ப் பிரசாரம். வேலை இல்லாதவர்கள், மோடி மீது பொய்க் குற்றச்சாட்டு வைப்பவர்கள் இதைப் பரப்பிவருகின்றனர். இதை தாரளமாகப் பொதுவெளியில் திரையிடுங்கள். யாரும் பார்க்க வர மாட்டார்கள். தி.மு.க-வைப்போல நாங்கள் யாரையும் தடுக்க மாட்டோம். 30 நாள்களாகியும், புதுக்கோட்டை தண்ணீர்த் தொட்டியில் மலம் கலந்தவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வட இந்திய தொழிலாளர்களை வெளியோ போ என்று சொல்வதைப்போல, பெங்களூரிலும் மகாராஷ்டிராவிலும் பணியாற்றும் தமிழர்களை வெளியே போங்கள் என்று சொன்னால் எங்கு போவார்கள்?
இன்னும் பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் வேலைக்கு ஆள் கிடைக்காது. ராஜ் பவனில் முதல்வரும் ஆளுநரும் ஒன்றாக கம்பீரமாக நடந்து வந்தார்கள். இருவரும் சுமுகமாக இருக்கிறார்கள். விமர்சனம் செய்பவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தால் அரசியல் செய்ய முடியாது” என்றார்.