சென்னையின் பிரபல கல்லூரியான எத்திராஜ் கல்லூரியில் பணத்தின் பயன்பாடு பற்றிய ஒரு நாள் சர்வதேச கருத்தரங்கம் இன்று நடந்தது. இந்தக் கருத்தரங்கில் முதலீட்டின் முக்கியத்துவம் பற்றி விரிவாக பேசப்பட்டது.
இந்தக் கருத்தரங்கில் சிறப்புப் பேச்சாளராக பெங்களூருவில் உள்ள டாக்டர் அம்பேத்கார் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் பானுமூர்த்தி, ஜியோட்டர் கிரிப்டோ கரன்ஸி எக்ஸ்சேஞ்சின் சி.இ.ஒ அர்ஜுன் விஜய், ஆடிட்டர் ரேவதி ரகுநாதன் ஆகியோர் பேசினர். ‘‘Rediscovering the Realm of Money’’ என்கிற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கத்தை நடத்தியது எத்திராஜ் கல்லூரியின் பி.காம் அக்கவுண்டிங் & ஃபைனான்ஸ் டிபார்ட்மென்ட்.
இந்தக் கருத்தரங்கைத் தொடங்கிவைத்துப் பேசிய எத்திராஜ் கல்லூரி டிரஸ்ட்டின் சேர்மன் வி.எம்.முரளிதரன், ‘‘எல்லாத் துறைகளிலும் மாணவ, மாணவிகள் தங்கள் திறமையை நன்கு வளர்த்துக் கொள்ள வேண்டும். தோல்விகளைக் கண்டு பயந்து நிற்கக்கூடாது. நமக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை துணிந்து சந்தித்தால்தான் நம்மால் ஜெயிக்க முடியும்.
காலம் நிறைய மாறிவிட்டது. தினம் தினம் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இந்த மாற்றத்திற்கு மாணவர்கள் தங்கள் திறமையை அதிகரித்துக்கொள்ள வேண்டும். இந்தக் கருத்தரங்கின் மூலம் மாணவர்கள் அனைவரும் பணத்தின் முக்கியத்துவதைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ளுங்கள்’’ என்றார்.
அடுத்து பேசிய ஆடிட்டர் ரேவதி ரகுநாதன், பாரதியாரின் பல கவிதை வரிகளை முன்வைத்து, பணத்தின் முக்கியத்துவதை பெண்கள் அறியவேண்டியதன் அவசியத்தை எடுத்துச் சொன்னார். ‘‘பணம் வேண்டாம் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்; சொல்லவும் கூடாது. நாம் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு பணம் அவசியம். அதே சமயம், அது மட்டுமே நமக்கு எல்லாம் தந்துவிடாது. பணத்திற்கும் வாழ்க்கைக்கும் இடையே ஒரு சமனை (balance) உருவாக்க வேண்டும்.
பெண்கள் விடுதலை வேண்டும் என்கிறோம். நிதி நிர்வாகம் செய்வதிலும் பெண்களுக்கு விடுதலை வேண்டும். நமக்குத் தேவைப்படும் பணத்தை நாமே சம்பாதிக்கவும், சம்பாதித்த பணத்தை நமக்குப் பிடித்த மாதிரி செலவு செய்யவும் நமக்கு உரிமை வேண்டும். பணம் என்பது அதிகாரம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
நம்மிடம் பணம் இருந்தால் மட்டும் போதாது; அந்தப் பணத்தை நிர்வாகம் செய்யக்கூடிய அறிவு இருக்க வேண்டும். இதற்கு அனைத்து மாணவிகளும் நிதிக் கல்வியைப் பெறவேண்டும். பணத்தை நிர்வாகம் செய்யக்கூடிய அறிவு நமக்கு இல்லை எனில், நாம் எவ்வளவு சம்பாதித்தாலும், நம்மால் அதை கட்டிக் காப்பாற்ற முடியாது’’ என்றார்.
அடுத்து பேசினார், டாக்டர் அம்பேத்கார் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் பானுமூர்த்தி. ‘‘இன்றைக்கு அனைவரும் ‘VUCA’ பற்றி பேசுகிறோம். அனைத்து நாடுகளிலும் பொருளாதார நெருக்கடி எதிர்கொள்கின்றன. ஆனால், கோவிட் காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து வெற்றிகரமாக மீண்டுவந்த ஒரே நாடு இந்தியாதான். இன்றைக்கு மற்ற நாடுகள் 2% – 3% என்கிற அளவில் வளர்ந்துகொண்டிருக்க, நாம் 7% பொருளாதார வளர்ச்சி கண்டுவருகிறோம்.
இன்றைக்கு நம் பொருளாதாரம் கட்டுக்கோப்பாக இருப்பதற்கு முக்கியமான காரணம், நமது ரிசர்வ் வங்கியின் கறாரான விதிமுறைகள்தான். 2000-த்தில் Y2K, 2008-ல் அமெரிக்க சப்க்ரைம், 2020-ல் கோவிட் என உலகமே ஸ்தம்பித்து நின்றபோது, நமது ரிசர்வ் எடுத்த சிறந்த முடிவுகளால் நமது பொருளாதாரம் சிறப்பாக மீண்டுவர முடிந்தது. நம் நாட்டின் பாதுகாப்புக்காக நமது ராணுவம் செய்யும் மகத்தான் பணிகள் நம் அனைவருக்கும் தெரியும். அதே போல, நம் நாட்டின் நிதிப் பாதுகாப்புக்காக நமது ரிசர்வ் வங்கி எடுக்கும் முடிவுகள் நம் மக்களுக்குத் தெரிவதில்லை. ரிசர்வ் வங்கியின் பெருமைகள் பற்றி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நாம் கட்டாயம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
2008-ல் அமெரிக்காவில் சி.டி.ஒ (CDO) என்கிற புதிய ஒரு விஷயத்தைக் கொண்டுவந்துவிட்டு, அதை இந்தியாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று கேட்டு வந்தார்கள் சிலர். அவர்கள் அப்போது ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த Y.V.ரெட்டியை சந்தித்து விளக்கினார்கள். அவர்களிடம் பல கேள்விகளைக் கேட்டார் ரெட்டி. அந்தக் கேள்விகளுக்கு அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. ‘‘எனக்கே புரியாத ஒரு விஷயத்தை என் மக்களிடம் அறிமுகப்படுத்த மாட்டேன்’’ என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார். அவர் மட்டும் சி.டி.ஒ.வை இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தால், அமெரிக்காவில் நடந்தது போல இந்தியப் பொருளாதாரமும் பெரிய அளவில் பாதிப்பு அடைந்திருக்கும். ‘‘எங்களுக்கு ரெட்டி மாதிரி ஒருவர் கிடைத்திருந்தால், அமெரிக்காவில் சப்க்ரைம் என்கிற பிரச்னையையே வராமல் தடுத்திருப்போம்’’ என்று அவர்கள் சொல்வது உண்மையான பாராட்டு.
கிரிப்டோ கரன்ஸியை நமது ரிசர்வ் வங்கி சந்தேகத்துடன் பார்ப்பதால்தான் அதற்கான அனுமதியைக் கொடுக்காமல் இருக்கிறது. இன்றைய இளைஞர்கள் பலர் கிரிப்டோவை வாங்குகின்றனர். அப்படி வாங்கும் இளைஞர்களை நான் எச்சரித்தேன். கிரிப்டோவின் விலை பயங்கரமாக இறங்கியபின்பு, ‘‘நீங்கள் சொன்னது சரிதான். உங்கள் வார்த்தையை நாங்கள் கேட்காததால், பல ஆயிரங்களை இழந்தோம்’’ என்று சொன்னார்கள்.
பங்குச் சந்தையோ, கிரிப்டோ கரன்ஸியோ, அதில் பணத்தை முதலீடு செய்வதற்கு முன்பு, அதைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ளுங்கள். முதலீட்டில் ரிஸ்க் அதிகம் இருந்தால், ரிட்டர்ன் என்று சொல்லப்படும் வருமானம் அதிகமாக இருக்கும். ரிஸ்க் குறைவாக இருந்தால், ரிட்டர்ன் குறைவாகத்தான் இருக்கும். உங்களால் முடிந்தால் மட்டுமே ரிஸ்க் எடுக்க வேண்டும்.
ஒரு நாட்டின் ஜி.டி.பி.யின் வளர்ச்சி விகிதம் எந்தளவுக்கு இருக்கிறதோ, அந்தளவுக்கே லாபம் கிடைக்கும். நம் நாட்டின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் 7% எனில், அந்த அளவுக்கு உறுதியான வருமானம் கிடைக்கும். அதைத் தாண்டி 15%, 20% லாபம் கிடைக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் அளவுக்கதிகமான ரிஸ்க் எடுக்கிறீர்கள் என்று அர்த்தம்’’ என்றவர், தன் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான விஷயம் ஒன்றை எடுத்துச் சொன்னார்.
‘‘நான் கல்லூரியில் பொருளாதார பாடம் படித்தவன். படித்து முடித்துவிட்டு, என் ஊருக்குப் போனபோது, என் அக்கம் பக்கத்தில் வாழ்ந்தவர்கள், ‘‘நாங்கள் எதில் முதலீடு செய்து லாபம் பார்க்கலாம்’’ என்று கேட்டார்கள். அப்போது, எனக்கு முதலீடு பற்றி எதுவும் தெரியாது. எனவே, தெரியாது என்று சொல்லிவிட்டேன். உடனே, அவர்கள் என் அப்பாவிடம் போய், ‘‘உங்கள் மகன் பொருளாதாரம் படித்தான்! எதில் முதலீடு செய்யலாம் என்று கேட்டால், தெரியாது என்கிறானே?’’ என்று புகார் சொன்னார்கள். அப்போதுதான் முதலீடு பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தேன். 2000-ஆம் ஆண்டில் எனக்கு வேலை கிடைத்தவுடன் முதல் மாதம் சம்பளம் ரூ.5,000 அப்படியே பங்குச் சந்தையில் ஹெச்.டி.எஃப்.சி பங்கு வாங்கி முதலீடு செய்தேன். இன்று வரை அந்தப் பங்கை வைத்திருக்கிறேன். பணவீக்கத்தைத் தாண்டி எனக்கு நல்ல வருமானம் கிடைத்துள்ளதுடன், முதலீடு என்றால் என்ன என்று புரிந்துகொள்ளவும் உதவியாக இருந்தது’’ என்று சுவாரஸ்யமாக பேசினார்.
அடுத்து பேசினார் ஜியோட்டர் கிரிப்டோ கரன்ஸி எக்ஸ்சேஞ்சின் சி.இ.ஒ அர்ஜுன் விஜய். ‘‘பணம் என்பது ஒரு பொருளுக்கு என்ன மதிப்பு என்பதை நாம் ஒப்புக்கொள்வதுதான். ஒரு காலத்தில் உணவுப்பொருள்கள்தான் மதிப்பு மிக்கதாக இருந்தன. பிற்பாடு இரும்பு, அலுமினியம் போன்றவை மதிப்புமிக்கதாக கருதப்பட்டன. அதன்பிறகு தங்கம், ரியல் எஸ்டேட், பணம் என்று மாறிக்கொண்டே இருக்கின்றன. இப்போது கிரிப்டோ கரன்ஸி புழக்கத்துக்கு வந்திருக்கிறது. இதற்கான மதிப்பு எவ்வளவு இருக்கும் என்பது போகப் போகத்தான் தெரியும்.
இந்த நவீன யுகத்தில் ப்ளாக்செயின் டெக்னாலஜியை உலகமே பின்பற்றுகிறது. நாம் அதை பயன்படுத்த மாட்டோம் என்று ஒதுக்க முடியாது. அப்படி ஒதுக்கினால், உலகம் அடையும் நன்மைகளை நாம் அனுபவிக்காமலே போவோம். கிரிப்டோ கரன்ஸி பற்றி முதலில் நன்கு தெரிந்துகொள்ளுங்கள். பிற்பாடு அதில் பணத்தைப் போடலாமா, வேண்டாமா என்று முடிவு செய்யுங்கள்’’ என்றார்.
இந்தக் கருத்தரங்கம் பணத்தின் பயன்பாடு பற்றி மாணவ, மாணவிகள் அனைவரும் தெரிந்துகொள்ள பெரும் உதவியாக இருந்தது. இது மாதிரியான கருத்தரங்கம் தமிழகத்தின் அனைத்துக் கல்லூரிகளிலும் நடத்தப்பட வேண்டும் என்பது நம் எதிர்பார்ப்பு!