சென்னை: தேர்தலில் திமுக பணத்தை மட்டுமே நம்பும் கட்சி என்று சாடியுள்ளார் தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை. வரும் பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து களமிறங்கியுள்ளது.
இந்நிலையில் தேர்தல் பணிகள் சார்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் அமைச்சர் கே.என்.நேரு பேசும் வீடியோ ஒன்றை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “திமுக என்பது பணத்தை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்கும் ஒரு கட்சி. பணத்தை வைத்து எதையும் வாங்கி விடலாம் என்று நம்பும் ஒரு கட்சி. சந்தேகம் இருப்பின், இந்த காணொளியை பார்க்கவும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
திமுக என்பது பணத்தை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்கும் ஒரு கட்சி;
பணத்தை வைத்து எதையும் வாங்கி விடலாம் என்று நம்பும் ஒரு கட்சி.
சந்தேகம் இருப்பின், இந்த காணொளியை பார்க்கவும். @TNelectionsCEO @ECISVEEP pic.twitter.com/wU3HNIIHZW
— K.Annamalai (@annamalai_k) January 29, 2023
காணொலியில் இருப்பது என்ன? அந்தக் காணொலியில் அமைச்சர் கே.என்.நேருவும், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனும் பேசிக் கொள்வது போல் இருக்கிறது. ஒருபுறம் அமைச்சர் எ.வா.வேலு ஒலிப்பெருக்கில் ஏதோ அறிவித்துக் கொண்டிருக்க பின்னணில் நேருவின் குரல் சன்னமாகக் கேட்கிறது. அதில் அவர், தொகுதியில் பணப்பட்டுவாடா பற்றி பேசுவதுபோல் உள்ளது. அமைச்சர்கள் வேண்டாம் மாவட்டச் செயலாளர்களை வைத்து பணியை முடிக்க உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறுவதுபோல் உள்ளது. இந்தக் காணொலியின் உண்மைத்தன்மை பற்றி உறுதியான தகவல் இல்லை. இருப்பினும் இதனை வைத்து பாஜக, திமுக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக சார்பில் சிவபிரசாத் ஆகியோர் வேட்பார்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தரப்பில் இருந்து இன்னும் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.