ஓமலூர்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள், ஊழல் நடைபெறுவதாக பல புகார்கள் எழுந்தது. இதில், உடற்கல்வி இயக்குனர் நியமனத்தில் பல்கலைக்கழக மானியக்குழு வழி காட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படாதது, பல்கலைக்கழக நூலகர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் ஆகிய பதவிகள் இட ஒதுக்கீடு ஆணைப்படி நியமிக்காதது, தமிழ் துறை தலைவர் பெரியசாமி நியமனத்தில் நடைபெற்ற முறைகேடுகள், பெரியசாமி கொடுத்துள்ள போலிச்சான்று, தகுதியின்மை ஆகியவை குறித்து புகார் எழுந்தது.
மேலும், பெரியசாமியை விட பலரும் சீனியராக இருக்கும் நிலையில், பணியில் இளையவரான இவரை ஆட்சிக்குழு உறுப்பினராக நியமனம் செய்ய பரிந்துரை செய்தது, விதிகளுக்கு புறம்பாக அவரையே ஆட்சிக்குழு உறுப்பினராக இரண்டு முறை நியமித்தது, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் நியமிக்கும் குழுவில் விதிகளுக்கு புறம்பாக பெரியசாமியை நியமித்தது, பல்வேறு குற்ற செயல்களில் தொடர்புடைய நெல்சன் என்பவரை துணைவேந்தரின் உதவியாளராகவும், குழந்தைவேல் என்பவரை முக்கிய பொறுப்பிலும் முறைகேடாக நியமனம் செய்தது உள்ளிட்ட புகார்கள் தொடர்ந்து வந்தது.
மேலும், 450 பணியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், சுமார் 18 மாணவர்களை பணி பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளுக்கு பிறகு, மணிக்கணக்கு அடிப்படையில் பணியில் சேர்த்தது உள்ளிட்ட 13 புகார்கள் கூறப்பட்டுள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தர விட்டது. இதுகுறித்து உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அரசாணை வெளியிட்டு இருந்தார்.
இதனை தொடர்ந்து இன்று காலை 11 மணி முதல் விசாரணை துவங்கியுள்ளது. அரசு நியமித்த உயர் கல்வித்துறை கூடுதல் செயலாளர் பழனிச்சாமி, அரசு இணை செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் ஆகியோர் கொண்ட குழு பல்கலைக்கழகம் வந்துள்ளது. இந்த குழு இரண்டு மாதங்களுக்குள் தங்களது விசாரணை அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும். இந்த குழுவின் விசாரணைக்கு பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் உரிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகம் வந்த அதிகாரிகள், முதற்கட்டமாக ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர். 2 நாட்கள் இந்த விசாரணை நடைபெற உள்ளது. மேலும், இந்த விசாரணை தொடர்ந்து அனைவரிடமும், அனைத்து கட்டத்திலும் நடைபெறும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.