பழநி: தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழநி முருகன் கோயிலுக்கு பொள்ளச்சி பணிக்கம்பட்டியை சேர்ந்த பக்தர்கள் மாட்டு வண்டியில் வந்து தரிசனம் செய்தனர்.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் ஜன.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தைப்பூசத் திருவிழா தொடங்கியது. இதை முன்னிட்டு விரதம் இருந்து மாலை அணிந்த பக்தர்கள் பாயாத்திரையாக வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக உள்ளூர் மட்டுமன்றி வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அவ்வாறு வரும் பக்தர்கள் சண்முக நதி, இடும்பன் குளத்தில் புனித நீராடி அலகு குத்தியும், காவடி எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். இந்நிலையில் போக்குவரத்தில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டுவிட்ட இந்த காலத்திலும், தங்களின் முன்னோர்களை போல் மாட்டு வண்டிகளில் சென்று தைப்பூசத் திருவிழாவின் போது பழநி முருகனை தரிசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர் பொள்ளாச்சியை சேர்ந்த பணிக்கம்பட்டி கிராம மக்கள்.
இவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தங்கள் கிராமத்தில் இருந்து பாரம்பரிய முறைப்படி 21இரட்டை மாட்டு வண்டிகளில் புறப்பட்டு, 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை பழநி வந்தடைந்தனர். அவர்கள் சண்முகநதியில் நீராடி விட்டு மலைக்கோயிலுக்கு சென்று முருகனை தரிசித்து விட்டு மீண்டும் ஊர் திரும்பினர். பழநி நகருக்குள் வாகனங்களை மட்டுமே பார்த்து பழக்கப்பட்ட மக்கள், வரிசைக்கட்டி சென்ற மாட்டு வண்டியை பார்த்து பிரமித்தனர்.