பெஷாவர்: பாகிஸ்தானில் மசூதி ஒன்றி நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 28 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் உள்ள மசூதியின் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 28 பேர் பலியாகினர்; 100-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். குண்டுவெடிப்பினால் மசூதியின் கட்டிடம் சரிந்துள்ளதால் இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்புப் பணி தொடர்ந்து வருகிறது. உயிரிழந்தவர்களில் பலர் போலீஸார் என்று அறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த குண்டுவெடிப்பு குறித்து பாகிஸ்தான் போலீஸார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. பாகிஸ்தானில் நாடு முழுவதும் தாக்குதல் நடத்தப்படும் என அந்நாட்டில் இயங்கும் தலிபான்கள் அமைப்பு மிரட்டல் விடுத்திருந்தது. இந்த நிலையில், இந்தக் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.
முன்னதாக, பாகிஸ்தானில் பயங்கரவாதம் மீண்டும் தலையெடுத்துள்ளது. அதனை ஒழிக்க அனைத்து மாகாண அரசுகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். பயங்கரவாதிகளாலும், போராளிகளாலும் நாட்டின் உறுதியை ஒருபோதும் அசைக்க முடியாது என அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.