சென்னை, வியாசர்பாடி சர்மா நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (27). இவர் கொளத்தூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் முகவராகப் பணியாற்றிவந்தார். இந்த நிலையில், நேற்று இரவு 10 மணியளவில் வியாசர்பாடியிலுள்ள சாலையோரக் கடையில் புரோட்டா வாங்கிவந்து, குடும்பத்துடன் சாப்பிட்டிருக்கிறார். பின்னர் கார்த்திக் மட்டும் பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானம் குடித்துவிட்டுத் தூங்கச் சென்றிருக்கிறார்.
இரவு 11 மணியளவில் கார்த்திக்கு குமட்டல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனைக் கண்ட அதிர்ச்சியடைந்த கார்த்திக் குடும்பத்தினர், அவரை உடனடியாக அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், கார்த்திக்கின் உடல்நிலை மோசமாக இருக்கிறது என்று கூறியிருக்கின்றனர். இதனையடுத்து, கார்த்திக் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.
மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே கார்த்திக் சுயநினைவை இழந்து மயக்கமடைந்ததாகக் கூறப்படுகிறது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கார்த்திக்கைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியிருக்கின்றனர். தகவலறிந்து வந்த போலீஸார், கார்த்திக்கின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுப்பிவைத்திருக்கின்றனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
கார்த்திக் குடும்பத்தில் புரோட்டா சாப்பிட்ட மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில், கார்த்திக் மட்டும் குளிர்பானம் குடித்திருந்தார். கார்த்திக்கின் மரணத்துக்கு புரோட்டா சாப்பிட்டது காரணமா… இல்லை அதைத் தொடர்ந்து அவர் குடித்த குளிர்பானம் காரணமா என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியவரும் என்கிறார்கள் போலீஸார்.
இளைஞர் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.