ஒடுகத்தூர்: ஒடுகத்தூர் அருகே பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்திய வாலிபரை தட்டிக் கேட்ட சிறைக் காவலர் குடும்பத்தின் மீது வீடு புகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பலை கைது செய்யும்படி ஒடுகத்தூர் பஸ் நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் குழந்தையுடன் 3 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் சந்தைமேடு பகுதியை சேர்ந்தவர் திருமால். இவர் ஆம்பூர் சிறையில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ரமா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இவரது மகள் ஒடுகத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.
அதேபோல், ஒடுகத்தூர் அடுத்த தீர்த்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் ஒடுகத்தூர் சந்தைமேடு பகுதியில் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார். இவருக்கு சந்தோஷ்(22), திருநாவுக்கரசு என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் தந்தைக்கு உதவியாக கடையில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், சந்தோஷ் சந்தைமேடு பகுதியை சேர்ந்த பிளஸ் 1 மாணவியை பள்ளிக்கு சென்று வரும்போதெல்லாம் கேலி கிண்டல் செய்வதோடு தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தியுள்ளார். இதனால், மனவேதனையடைந்த மாணவி பெற்றோரிடம் அழுதபடி கூறியுள்ளார். பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஸ்வீட் கடைக்கு சென்று சந்தோசை கண்டித்து அவரை தாக்கி கடையில் உள்ள பொருட்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த சந்தோஷ் தனது உறவினர்கள் 20 பேருடன் சந்தைமேடு பகுதிக்கு சென்று மாணவியின் வீடு புகுந்து அவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், தலைமை காவலர் திருமால், அவரது அண்ணன் மகன்கள் மதன்குமார், தியாகராஜன் உட்பட வீட்டில் இருந்த பெண்கள், குழந்தைகள் என 8 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்ட தியாகராஜனுக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, திருமால் நேற்று முன்தினம் வேப்பங்குப்பம் போலீசில் புகார் கொடுத்தார். அதேபோல், ஸ்வீட் கடையை அடித்து நொறுக்கி, தங்களை தாக்கிய திருமால் மற்றும் அவரது உறவினர்கள் மீது ராமச்சந்திரன் வேப்பங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் இருதரப்பிலும் 7 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட திருமாலின் மனைவி மற்றும் குடும்பத்தினர், பொதுமக்கள் என திரளானோர் நேற்று காலை ஒடுகத்தூர் பஸ்நிலையத்தில் திரண்டனர். வீடு புகுந்து தாக்கியவர்களை உடனே கைது செய்ய கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆனால், தாக்கியவர்களை கைது செய்யும்வரை இங்கிருந்து போக மாட்டோம் என்று அவர்கள் மறியலை தொடர்ந்தனர். தொடர்ந்து ஈடுபட்டனர். அப்போது, திருமாலின் மனைவி மற்றும் சகோதரி, தியாகராஜன் மனைவி ஆகிய 3 பேரும் குழந்தையுடன் மண்ணெண்ணெய்யை தங்களது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். பின்னர் டிஎஸ்பி திருநாவுக்கரசு வந்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதாக உறுதியளித்தபின் கலைந்து சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் 3 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.