சென்னை: 2023-24 ஆண்டுக்கான பட்ஜெட் வரும் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. முந்தைய இரண்டு பட்ஜெட்களை போலவே காகிதமில்லா வடிவில் பட்ஜெட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் குறித்த விவரங்கள் வலைதளம், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளம் கொண்ட போன்களில் பயனர்கள் பெறலாம்.
கடந்த 2021-ல் இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ஆண்டு நிதிநிலை அறிக்கை, மானியக் கோரிக்கைகள், நிதி மசோதா உட்பட 14 மத்திய பட்ஜெட் ஆவணங்களை பயனர்கள் அக்செஸ் செய்ய முடியும். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை முடித்த பின், பட்ஜெட் ஆவணங்களை பயனர்கள் வலைதளம் மற்றும் செயலியில் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் இந்த மொபைல் செயலியின் மூலம் பயனர்கள் பட்ஜெட் குறித்த விவரங்களை பெறமுடியும். இதனை தேசிய தகவல் மையம் வடிவமைத்துள்ளது. பொருளாதார விவகாரங்கள் துறையின் வழிகாட்டுதலின் கீழ் இந்த பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பட்ஜெட் குறித்த முக்கிய அம்சங்கள் அதற்கென உள்ள பிரத்யேக பிரிவில் பயனர்கள் தெரிந்து கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் https://www.indiabudget.gov.in என்ற தளத்தில் இருந்தும் செயலிகளை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.