விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஆனத்தூர் ஊராட்சிக்கு உட்பட்டது தொட்டி மேடு கிராமம். இங்கு சுமார் 350க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு தனியாக மயானம் இல்லாததால் ஆனத்தூர் ஏரியின் அருகில் உள்ள அரசுக்சொந்தமான இடத்தை காலகாலமாக மயானமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று அதே ஊரைச்சேர்ந்த நரசிங்கம் மகன் ஆறுமுகம் (வயது 85) உடல்நல குறைவால் இறந்துள்ளார், அவரை மயானத்திற்கு எடுத்து சென்று அடக்கம் செய்ய ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் தயார் செய்துள்ளனர். அப்போது அதே ஊரைச்சேர்ந்த தில்லைவாசன், ஆறுமுகம், பாலசுப்ரமணியன் ஆகியோரின் நிலத்தின் வழியாகவே சடலத்தை எடுத்து செல்வது வழக்கம்.
தற்போது தில்லை வாசன் நிலத்தில் மணிலாவும், ஆறுமுகம் நெல் மற்றும் கொய்யா பயிர் செய்துள்ளனர். மேலும் பாலசுப்ரமணயன் நெல் அறுவடை செய்துள்ளார். இந்நிலையில் சடலத்தை தூக்கி செல்லும்போது வயலில் உள்ள பயிர்களை மிதித்து நாசம் செய்வார்கள் என்று கூறி தில்லை வாசன் மற்றும் ஆறுமுகம் இருவரும் சடலத்தை எடுத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் 2 நாட்களாக முதியவரின் சடலம் மயானத்திற்கு எடுத்து செல்ல பாடை கட்டி தயார் நிலையில் இருந்தும் எடுத்து செல்ல வழியில்லாமல் காத்துக்கிடக்கிறது. இதில் ஆத்திரமடைந்த தொட்டிமேடு கிராம மக்கள் அரசூர் – பண்ருட்டி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் மற்றும் வட்டாட்சியர் பாஸ்கர்தாஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விரைவில்நடவடிக்கை எடுப்பதாக கூறியதன்பேரில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது.