சென்னை: காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து மேலும் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற செய்திதாளில் வந்த விவசாயிகளின் கோரிக்கை தொடர்பான அறிக்கை: 2022 – 2023-ஆம் ஆண்டுக்கு, மேட்டூரிலிருந்து வழக்கமாக திறக்கப்படும் தண்ணீர் ஜுன் 12-ஆம் தேதிக்கு பதிலாக முன்னதாக மே 24-ஆம் தேதியே பாசனத்திற்காக திறக்கப்பட்டது. இதன் மூலமாக 12.80 இலட்சம் ஏக்கர் பாசன நிலங்களில் பயிரிடப்பட்ட குறுவை, சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு மேட்டூர் அணை இயக்க விதிகளின்படி தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது.
2022 – 2023-ஆம் ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து முழுமையாக திறக்கப்பட்ட காவிரி நீரைக்கொண்டு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் 12.80 ஏக்கர் பாசன நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள குறுவை, சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு சிறந்த முறையில் பாசனம் அளிக்கப்பட்டு பெரும்பாலான நிலங்களில் தற்சமயம் அறுவடை நடைபெற்று வருகிறது. இயக்க விதிகளின்படி மேட்டூர் அணை கடந்த ஜனவரி 28-ஆம் தேதி மூடப்பட்டாலும், அதுவரை திறந்துவிடப்பட்ட தண்ணீரைக்கொண்டு மேலும் ஒருவார காலத்திற்கு பாசனம் வழங்க இயலும். எனவே காவிரி டெல்டாவில் தேவைப்படும் இடங்களுக்கு மட்டும் நீர் செல்லுமாறு சீரிய முறையில் நீர்ப்பங்கீடு செய்யப்பட்டு பாசனம் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு கல்லணைக் கால்வாய் பகுதிகளில் முழுவதுமாக நிரப்பப்பட்டுள்ள 690 ஏரிகளில் உள்ள நீரைக் கொண்டும் பாசனம் அளிக்கப்படுகிறது. மேலும், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்துள்ளது. இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், பாசனத்திற்கான தண்ணீர் தேவை குறைவதால், மேட்டூர் அணையிலிருந்து மேலும் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.