மேட்டூர் அணை – கூடுதல் நீர் திறக்க வி.கே.சசிகலா வேண்டுகோள்!

மேட்டூரில் இருந்து இன்னும் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அஇஅதிமுக பொதுச் செயலாளர் எனக் குறிப்பிட்டு வி.கே.சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது:

தஞ்சாவூர், நாகப்பட்டிணம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் உள்ளிட்ட கடைமடை பகுதிகளைச் சேர்ந்த டெல்டா விவசாயிகள் தாங்கள் பயிரிட்டுள்ள தாளடி நெற்பயிர்கள் வீணாகிவிடாமல் காப்பாற்றுவதற்காக மேட்டூர் அணையிலிருந்து மேலும் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.

டெல்டா விவசாயிகள், மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதிகளை வந்தடைய காலதாமதம் ஆனதாலும், தொடர் மழையின் காரணங்களாலும் சாகுபடி செய்யப்பட்ட குறுவை பயிர்களை அறுவடை செய்து முடிக்க காலதாமதம் ஏற்பட்டு அதன் பின்னர் தான் தாளடி நெல்லை பயிரிட்டுள்ளனர்.

இந்த நெற்பயிர்கள் நன்றாக முற்றி தற்சமயம் பால் கட்டும் பருவமாக இருப்பதால், நெற்பயிர்கள் முழு வளர்ச்சியடைந்து அறுவடைக்கு தயாராக இன்னும் ஒருமாதக் காலம் ஆகும் என்ற நிலை இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தமிழக அரசு மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவதை நிறுத்தி விட்டதால் தாளடி பயிர்கள் வீணாகி விடும் என்று டெல்டா விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தமிழக அரசு மேட்டூரிலிருந்து தண்ணீர் திறப்பதை கடந்த 28-01-2023 அன்று நிறுத்தி விட்டபடியால், டெல்டா மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள தாளடி பயிர்கள் வீணாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேட்டூரிலும் 104 அடிகளுக்கு மேல் போதுமான அளவுக்கு தண்ணீர் இருப்பதால், மேட்டூரிலிருந்து இன்னும் 15 நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விடுவதில் எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது.

விவசாயிகள் ஏற்கனவே பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் மிகவும் சிரமப்பட்டு ஒரு ஏக்கருக்கு குறைந்தது 20 முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து பயிரிட்டு இருக்கும் சூழலில், தற்போது தண்ணீர் நிறுத்தப்பட்டு விட்டதால் மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிடும்.

எனவே டெல்டா பாசன விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மேட்டூர் அணையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ள தண்ணீரை இன்னும் 15 நாட்களுக்கு கூடுதலாக திறந்து விட வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.