மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயம், ராணுவ வீரருக்குப் பொருத்துவதற்காக தனி விமானத்தில் புனேவுக்கு இன்று எடுத்துச் செல்லப்பட்டது.
மத்திய பிரதேசம் உஜ்ஜைனியைச் சேர்ந்தவர் பிரதீப் அஸ்வானி. காய்கறி வியாபாரம் செய்துவந்த இவர், கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி, சாலை விபத்து ஒன்றில் படுகாயமடைந்தார். அவருக்கு தலையில் பலத்த காயமடைந்ததை அடுத்து, இந்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு தீவிரசிகிச்சை அளித்தும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து, அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால், அவரது குடும்பத்தினர் பிரதீப் அஸ்வானியின் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புக்கொண்டனர்.
அதைத் தொடர்ந்து அவரது இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் கண்கள் ஆகியவற்றை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் தானமாகப் பெற்றனர். இதுகுறித்து இந்தூர் டிவிஷனல் கமிஷனர் (வருவாய்) டாக்டர் பவன் குமார் ஷர்மா, ”அஸ்வானியின் உடலில் இருந்து தானமாய்ப் பெறப்பட்ட இதயம், ராணுவ வீரர் ஒருவருக்குப் பொருத்துவதற்காக சிறப்பு விமானம் மூலம் இன்று புனேவுக்குக் கொண்டு செல்லப்பட்டது” எனத் தெரிவித்தார். அஸ்வானியின் சகோதரி நீலம் குஷ்லானி, “இறந்த என் தம்பியின் இதயம், ராணுவ வீரருக்கு பொருத்தப்பட இருப்பது எங்கள் குடும்பத்திற்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இதன்மூலம் என் தம்பி, நாட்டுக்கு ஒரு ராணுவ வீரராய் வாழ்ந்து பணியாற்றுவார் என உணர்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே அஸ்வானியின் சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் கண்கள் உள்ளூர் மருத்துவமனைகளில் தேவைப்படும் நோயாளிகளுக்குப் பொருத்தப்படும் என உறுப்பு தானத்திற்கான இந்தூர் சொசைட்டி அமைப்பு தெரிவித்துள்ளது. பிரதீப் அஸ்வானியின் உறுப்புகள் தானமாய்ப் பெறப்பட்ட பிறகு, அவரது உடல் இறுதிச் சடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவருக்கு அந்தத் தொகுதி எம்பி சங்கர் லால்வானி, மருத்துவர்கள், காவல் துறையினர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM