டெல்லி: லட்சத்தீவு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அருணாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்குவங்கம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் காலியாக உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், லட்சத்தீவு மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தலுக்கான அறிவிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு, அருணாச்சல பிரதேசத்தில் லும்லா, ஜார்க்கண்டில் ராம்கர், மேற்கு வங்கத்தில் சாகர்திகி, மகாராஷ்டிராவில் கஸ்பா பேத், சின்ச்வாட் ஆகிய 6 தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் 31 ஜனவரி 2023 அன்று தொடங்குகிறது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய 7 (செவ்வாய்) பிப்ரவரி 2023 அன்று கடைசி நாளாகும்.
இந்நிலையில் லட்சத்தீவு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பிப்.27-ல் நடக்கவிருந்த லட்சத்தீவு தொகுதி இடைத்தேர்தலை நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. லட்சத்தீவு தொகுதி எம்.பி. முகமது பைசலுக்கு கொலை முயற்சி வழக்கு ஒன்றில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து முகமது பைசலின் மக்களவை உறுப்பினர் பதவி பறிபோனது.
முகமது பைசலின் மக்களவை உறுப்பினர் பதவி பறிபோனதை அடுத்து அங்கு ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்தது. தீர்ப்பை எதிர்த்து முகமது பைசல் மேல்முறையீடு செய்ததை அடுத்து தண்டனையை ஐகோர்ட் நிறுத்திவைத்து உத்தரவிட்டது. முகமது பைசலின் சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதால் லட்சத்தீவு இடைத்தேர்தலை ஆணையம் நிறுத்திவைத்தது.