பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலையானது வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.
பொருளாதார ரீதியாக பாகிஸ்தான் கடுமையான சூழலை சந்தித்துள்ளது. பணவீக்கம் அதிகரிப்பு, அந்நியச் செலாவணி கையிருப்பில் வீழ்ச்சி, வெள்ள பாதிப்பு ஆகியவை மிகப்பெரிய நெருக்கடியை கொடுத்துள்ளன.
தற்போது அந்நாட்டு அரசிடம் இருக்கும் வெளிநாட்டு பணத்தை வைத்து இரண்டு மாத காலத்துக்கும் குறைவான தேவையை மட்டும் பூர்த்தி செய்ய முடியும். அதனால் பாகிஸ்தான் அந்நிய செலாவணியை திரட்டுவதற்கான அவசரத் தேவையில் உள்ளது.
இந்தநிலையில் பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 35 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் இந்த சூழல் நிலவுகிறது.
பெட்ரோல் ஒரு லிட்டர் அந்நாட்டு நாணய மதிப்பில் ரூ.249. 80-க்கு விற்பனையாகிறது. ஒரு லிட்டர் டீசலின் விலை பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில், ரூ.262.80 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் மட்டுமின்றி மண்ணெண்ணெய் விலையும் லிட்டருக்கு 18 ரூபாய் அதிகரித்துள்ளது. எரிபொருளின் இருப்பை பொறுத்தே, தற்போது விலையை உயர்த்தி இருப்பதாக நிதியமைச்சர் இஷாக் விளக்கம் அளித்துள்ளார்.
இலங்கையிலும் இதுபோன்ற சூழல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அந்நாடு திவாலானது. மக்கள் போராட்டம் வெடித்தது. அதே போன்ற சூழல் பாகிஸ்தானுக்கும் வரும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
newstm.in