வந்தாச்சு ‛விஜய் 67' அப்டேட் : ரசிகர்கள் குஷி, இந்தவாரம் முழுக்க கொண்டாட்டம் தான்
மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் உடன் மீண்டும் இணைந்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தற்காலிகமாக விஜய் 67 என குறிப்பிடப்பட்டு வரும் இதன் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. ஆனாலும் படம் பற்றிய எந்த அறிவிப்பையும் படக்குழு வெளியிடவில்லை. வாரிசு படம் ரிலீஸை காரணம் காட்டி இந்த பட அப்டேட்டை தவிர்த்து வந்தனர். தற்போது அந்தபடமும் வெளியாகிவிட்டது. இதனால் இந்தவாரம் முதல் விஜய் 67 அப்டேட் வெளிவரும் என லோகேஷ் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த பட அப்டேட்டை படத்தை தயாரிக்கும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில், ‛‛மாஸ்டர் படத்திற்கு பின் மீண்டும் விஜய் – லோகேஷ் கனகராஜ் உடன் இணைவது மகிழ்ச்சி. ஜன., 2ல் இதன் படப்பிடிப்பு துவங்கியது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக மனோஜ் பரஹம்சாவும், ஸ்டன்ட் இயக்குனர்களாக அன்பறிவும், எடிட்டிங்கை பிலோமின் ராஜூம், ஆர்ட் டைரக்ஷன் பணியை சதீஷ் குமாரும், நடன பணியை தினேஷூம், வசன பணியை லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார், தீரஜ் வைத்தி ஆகியோரும் கவனிக்கின்றனர். மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்தவாரம் முழுக்க இந்த படம் பற்றிய மேலும் பல அப்டேட்களை வெளியாக உள்ளன. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். தொடர்ந்து விஜய் 67 படம் பற்றிய தகவல்களை டிரெண்டிங்கில் கொண்டு வந்துள்ளனர்.