விருதுநகர், கொல்லர் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 42). இவரின் மனைவி அமல்ராணி, விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க மகளிரணி துணைத் தலைவியாக இருக்கிறார். இந்தத் தம்பதி கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக விருதுநகர் பேராலி ரோடு ஐ.டி.பி.டி காலனியில் புதிதாக வாடகை வீட்டில் குடியேறினர். இந்த நிலையில், அந்த வீட்டுக்கு அடிக்கடி ஆண்கள் வந்து சென்றது அக்கம், பக்கத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து, சந்திரசேகரன் வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக விருதுநகர் ஊரக காவல் நிலைய போலீஸூக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்பேரில் அங்கு சென்ற போலீஸார், வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் வீட்டில் ஓர் அறையில் ஆணும், பெண்ணும் தனிமையில் இருப்பதை அறிந்த போலீஸார், அவர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், அவர்கள் சிவகாசியைச் சேர்ந்த ஹரிபாலகுமார் (24), சாத்தூரைச் சேர்ந்த இளம்பெண் என்பது தெரியவந்தது. இவர்கள், இருவரும் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்ததைத் தொடர்ந்து வீட்டில் பாலியல் தொழில் நடப்பது உறுதியானது. இது தொடர்பாக, சந்திரசேகரன், அவர் மனைவி அமல்ராணியிடம் விசாரணை நடத்துகையில், இளம்பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதித்தது தெரியவந்தது. எனவே, சந்திரசேகரன், அமல்ராணி, ஹரிபாலகுமார் ஆகிய 3 பேரையும் போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.