ஸ்ரீநகர்: கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் பாரத ஒற்றுமை பாத யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார். பல்வேறு மாநிலங்களில் பாத யாத்திரை மேற்கொண்ட அவர் இறுதி கட்டமாக தற்போது ஜம்மு-காஷ்மீரில் முகாமிட்டிருக்கிறார்.
அவர் ஸ்ரீநகரின் பாந்தா சவுக் பகுதியில் நேற்று காலை 10 மணிக்கு பாத யாத்திரையை தொடங்கினார். மதியம் 12 மணி அளவில் ஸ்ரீநகரின் லால் சவுக் பகுதியில் ராகுல் காந்தி தேசிய கொடியேற்றினார். ராகுலின் பாத யாத்திரை ஸ்ரீநகரில் இன்றுடன் நிறைவு பெறுவதாக இருந்தது. இறுதி நாளில் லால் சவுக் பகுதியில் தேசிய கொடியேற்ற அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் பாதுகாப்பு காரணங்களால் ஒருநாள் முன்கூட்டியே அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று அவர் தேசிய கொடியேற்றினார். அதோடு அவரது பாத யாத்திரையும் நேற்றோடு நிறைவு பெற்று விட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும் காஷ்மீர்முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “கடந்த 1948-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் நேரு, ஸ்ரீநகர் லால் சவுக்கில் தேசிய கொடியேற்றினார். தற்போது அவரது பேரன் ராகுல் காந்தி தேசிய கொடியேற்றியுள்ளார்’’ என்று தெரிவித்துள்ளார்.