சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், துறை சார்ந்த அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “பொதுத் தேர்வு தொடர்பாக இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்வு தொடர்பாக சில ஆலோசனைகளை வழங்கி உள்ளேன்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசுகையில், “தமிழ்நாட்டில் பொதுத் தேர்வை 27 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத உள்ளனர். இந்த கூட்டத்தில் தேர்வு கண்காணிப்பாளர்களை எவ்வாறு நியமிப்பது, வினாத்தாள், தேர்வுத்தாள் பாதுகாப்பு, மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு தாமதம் இல்லாமல் வந்து செல்ல முறையான பேருந்து வசதிகளை ஏற்படுத்துவது மற்றும் சில தேர்வு நேரங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது” என தெரிவித்தார்.
கடந்த முறை எந்த ஒரு தவறும் நடக்காமல் பொதுத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது போல, எந்த முறைகேடுகளுக்கும் இடமின்றி இந்தாண்டும் தேர்வுகள் சிறப்பாக நடத்தி முடிக்கப்படும். செய்முறை தேர்வுகளை பொறுத்தவரை ஏற்கனவே 6 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடத்தப்பட இருந்த நிலையில், செய்முறை தேர்வுகளை முன்னதாக வைத்தால் தேர்வுக்காக தயாராக நேரம் கிடைக்கும் என்ற காரணத்தால் அது மார்ச் முதல் வாரத்திலேயே நடத்தப்பட திட்டமிட்டுள்ளது.
இதுவரை தேர்வு எழுத விண்ணப்பம் செய்யாத 10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுத உள்ள தனி தேர்வர்களுக்கு இன்று, நாளை, நாளை மறுநாள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும். மாணவர்கள் வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
தேர்வுகள் எழுதி முடிக்க முடிக்க தேர்வுத் தாள்கள் திருத்தும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெறும். 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 5ஆம் தேதியும், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 17 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் 19 தேதியும் வெளியிடப்படும்.
மாணவர்களின் தேர்வு பயத்தை போக்க திருப்புதல் தேர்வுகள் பொதுத் தேர்வுகள் போலவே தொடர்ச்சியாக நடத்தப்படுகிறது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் இரண்டு திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நிகழும் குளறுபடி தொடர்பாக எழுந்துள்ள புகார் குறித்து ஆலோசிக்க உள்ளோம்” என்றார். தொடர்ந்து மார்ச் ஒன்றாம் தேதி முதல் 9ம் தேதிக்குள் செய்முறை தேர்வுகள் நடத்தப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM