`புரியாத புதிர்’, `இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடியின் அடுத்த ரிலீஸ் ‘மைக்கேல்’. கதாநாயகனாக சந்தீப்கிஷனும் , மிரட்டலான வில்லன் தோற்றத்தில் விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.
முக்கிய கதாபாத்திரங்களில் திவ்யான்ஷா, வரலட்சுமி சரத்குமார், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வருகிற பிப்ரவரி 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இத்திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழா நேற்று சென்னை சேத்துப்பட்டிலுள்ள லேடி ஆண்டால் பள்ளியில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் உட்பட நடிகை ரெஜினா கசாண்ட்ரா, தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு ஞானவேல் ராஜா, தனஞ்ஜெயன் எனப் பலரும் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பங்கேற்ற தயாரிப்பாளர் தனஞ்செயன், “சந்தீப் கிஷன் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமாக இருந்து வருகிறார். தெலுங்கு சினிமாவில் இருந்து பல தயாரிப்பாளர்கள் இப்போது தமிழ் சினிமாவில் படங்கள் தயாரிக்கின்றனர். இதுபோன்ற தயாரிப்பில் `வாத்தி’ திரைப்படமும் அடுத்ததாக வெளிவரவிருக்கிறது. சாம் சி.எஸ் முதலில் `இஸ்பேட் ராஜாவும் இதய ராணி’யும் திரைப்படத்தில் வந்த ‘கண்ணம்மா’ பாடலை எனக்கு காண்பித்தார். இந்தப் பாடலை எனக்குக் கொடுக்குமாறு கேட்டேன். இந்தப் பாடலை ரஞ்சித் ஜெயக்கொடி தனது அடுத்த திரைப்படத்தில் உபயோகப்படுத்தப் போவதாகக் கேட்டுள்ளதாகக் கூறினார். அதனைத் தொடர்ந்து நான் ரஞ்சித் ஜெயக்கொடியிடம் அந்தப் பாடலை என் திரைப்படத்திற்குக் கொடுக்குமாறு கேட்டேன். அவர் கொடுக்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்துவிட்டார்.” என நகைச்சுவை பாணியில் பேசி விடைபெற்றார். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, “இயக்குநர் ராஜமெளலி ஒரு பேட்டியில், `தமிழ் திரைப்பட இயக்குனர்கள் டெக்னிக்கலாக பலமாக இருக்கிறார்கள்’ எனக் கூறினார்.
இதுபோல தான் ரஞ்சித் ஜெயக்கொடியும் டெக்னிக்கலாக பலமாக இருக்கிறார். அடுத்ததாக சந்தீப்கிஷனை வைத்து தெலுங்கில் ஒரு திரைப்படத்தைத் தயாரிக்கவுள்ளோம். இத்திரைப்படத்தினை ‘டார்லிங்’ திரைப்படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கவுள்ளார்.” எனத் தகவலைக் கொடுத்து விடைபெற்றார். அடுத்ததாக வந்து பேசிய தயாரிப்பாளர் எஸ். ஆர் பிரபுவிடம், “மாநகரம் திரைப்படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் என்ன?” என்று கேள்வி எழுப்பினார் நடிகர் சந்தீப் கிஷன். இதற்கு அவர், “திரைப்படத்தின் ஒன்லைன் கூறும்போதே அறிமுகம் இல்லாத நபர்களுக்கு செய்யும் உதவி நம்மை வந்து சேரும் என்று தான் லோகேஷ் கூறினார். அந்தப் பெயரை லோகேஷ் கூறினால் நன்றாக இருக்கும். அந்தப் பேருக்கு பெரிய உரிமங்கள் உருவாகலாம்.” என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து வந்து பேசிய இசையமைப்பாளர் சாம்.சி.எஸ், ” மைக்கேல் திரைப்படத்தின் ட்ரைலரில் கடைசியாக ‘எல்லாம் பொண்ணுக்காக தான் பண்ணியா மைக்கேல் – ஆமா சார்’ என்று ஒரு வசனம் வரும். என்னிடம் ஒருவர் கடைசியாக இந்த வசனத்தை நீக்கியிருக்கலாம் எனக் கூறினார். அந்த ஒரு பெண் காதலியாக, மனைவியாக மட்டும் இருக்க முடியாது.அது அம்மாவாக, தங்கச்சியாகக் கூட இருக்கலாம். இத்திரைப்படம் முழுவதும் அம்மா சென்டிமென்ட்டை மையப்படுத்தியது என்று கூறினால் யாரும் நம்பமாட்டார்கள். இத்திரைப்படத்தில் அதிக அளவிற்கு எமோஷன்கள் இருக்கிறது. ரஞ்சித்தின் அனைத்து திரைப்படங்களிலும் எமோஷன் இருக்கும்.டைட்டானிக், அவதார் போன்ற பெரிய திரைப்படங்களாக இருந்தாலும் எமோஷன் இல்லையென்றால் அது ஓடாது.
இதனை எனக்கு இருக்கும் அறிவை வைத்து நான் கூறுகிறேன். எமோஷன் இல்லாத எந்த திரைப்படமும் வெற்றி பெற்றதாக சரித்திரமே இல்லை. ” என்றார்.இயக்குனர் ரஞ்சித் ஜெயகொடி, ” கொரோனா காலகட்டத்தில் தான் நானும் சந்தீப்பும் நண்பர்களாகினோம். கொரோனா காலகட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும் போது தான் மைக்கேல் திரைப்படத்தின் ஒன் லைனை கூறினேன். நண்பராக சந்தீப்கிஷன் தயாரிப்பாளரைத் தேர்வு செய்து, தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்கை கொடுத்து திரைப்படத்தின் பிசினஸ் முதல் ப்ரோமோஷன் வரை அனைத்து வேலைகளையும் தன்னுடைய வேலைகளாக எடுத்து பார்த்துக்கொள்வார்.” என திரைப்படம் உருவான விதம் குறித்து பலவற்றையை பேசினார்.
கடைசியாகப் பேசிய சந்தீப் கிஷன், ” லோகேஷ் கனகராஜ், ரஞ்சித் ஜெயக்கொடியும் எனக்கு அறிமுகப்படுத்தியது பலூன் திரைப்படத்தின் இயக்குனர் சினிஷ் ஸ்ரீதரன் தான். முதன் முதலில் லோகஷ் கனகராஜை என்னிடம் கதை கூறுவதற்கு அவர் தான் அனுப்பி வைத்தார். இசையமைப்பாளர் சாம்.சி. எஸ், இயக்குனர் ரஞ்சித் ஜெயகொடி ஆகியோர் ‘Underrated’.
இத்திரைப்படத்தில் பலரும் அந்த வகை தான். சினிமாவில் வெற்றி காண்பதற்கு அதிர்ஷ்டம் மிகவும் அவசியம் என்று கூறுவார்கள். அது உண்மை தான். ஆனால் அந்த அதிர்ஷ்டம் தாண்டி உழைப்பால் ஒரு விஷயத்தை அடைய முடியும் என்கிற நம்பிக்கையில் தான் இத்திரைப்படத்தை தொடங்கினோம். ” என திரைப்படம் குறித்து பலவற்றையை பகிர்ந்து விடைபெற்றர், சந்தீப் கிஷன்.