நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டம் என்பதால் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். இவர் குடியரசு தலைவராக பதவியேற்ற பின்னர் ஆற்றும் முதல் உரை இதுவென்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் முன்பு பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், இன்றைய காலகட்டத்தில் இந்தியாவின் பட்ஜெட்டை உலகமே உற்றுநோக்குகிறது. பெரும் எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் முதல்முறை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றவுள்ளார். இது மகத்தான தருணம். உலக பொருளாதாரத்தின் நம்பகத்தன்மை வாய்ந்த குரல்கள் நேர்மறையான செய்திகளை தந்து கொண்டிருக்கின்றன. புதிய நம்பிக்கையும், புத்துணர்ச்சியும் பிறந்துள்ளது. சாமானியர்களின் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும். நம்மிடம் இருந்து நம்பிக்கை ஒளி உலகின் கவனத்தை ஈர்க்க காத்திருக்கிறது. நமது நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை மட்டுமின்றி, ஒட்டுமொத்த வளர்ச்சிக்குமான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்பிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தியாவிற்கு முன்னுரிமை, குடிமக்களுக்கே முன்னுரிமை என்ற தத்துவத்தின் அடிப்படையில் நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரை கொண்டு செல்வோம். இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் நாடாளுமன்றத்தில் முன்னெடுக்கப்படும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் தங்களது கருத்துகளை சரியான முறையில் முன்வைப்பர் என நம்புகிறேன். ஆக்கப்பூர்வமான முறையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.