அதானி குழுமத்துடன் இணைந்து செயல்படும் சீன நாட்டைச் சேர்ந்த சாங் சங் லிங் குறித்து ஹிண்டன்பர்க் புதிய தகவலை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட ஆய்வறிக்கையால், இந்தியாவின் பிரபல தொழில் நிறுவனமான அதானி குழுமம், அடுத்தடுத்து தள்ளாட்டங்களைச் சந்தித்து வருகிறது. தற்போது, தாம் எழுப்பியிருந்த 88 கேள்விகளில், பல கேள்விகளுக்கு அதானி குழுமம் பதிலளிக்கவில்லை என ஹிண்டன்பர்க் தெரிவித்திருந்தது. அதிலும், சீன நாட்டைச் சேர்ந்த சாங் சங் – லிங் என்பவருக்கும், அதானி குழுமத்துக்கும் என்ன சம்பந்தம் என தாம் கேட்டதற்கு இதுவரை பதிலளிக்கவில்லை என ஹிண்டன்பர்க் தெரிவித்திருப்பதுடன், அதற்கு விளக்கம் அளித்திருப்பதுதான் அவர்கள் இடையே மீண்டும் புயலைக் கிளப்பியிருக்கிறது.
அதானி குழும நிறுவனங்களில் ஒன்றான பி.எம்.சி. புராஜெக்ட்ஸ் (PMC PROJECTS) மூலம் அதிக லாபமடைவது, சீனாவைச் சேர்ந்த சாங் சங் லிங்க் என்பவரின் மகன் என ஹிண்டன்பர்க் தெரிவித்துள்ளது. இவர், கெளதம் அதானியின் சகோதரர் வினோத் அதானியின் நெருங்கிய நண்பர் எனவும் அது தெரிவித்துள்ளது. இதையடுத்தே, கடந்த 12 வருடங்களில் அதானி குழும இதர நிறுனங்கள் மூலம் பி.எம்.சி. புராஜெக்ட்ஸுக்கு சுமார் 6,300 கோடி ரூபாய் செலுத்தப்பட்டிருப்பதாகவும், ஆனால் இந்தப் பணம் செலுத்தப்பட்டதற்கு ஆவணங்கள் ஏதும் இல்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், சாங் சங் லிங்கின் மகன் தைவான் நாட்டில் மிகப்பெரிய முதலீட்டைச் செய்திருப்பதாகவும் ஹிண்டன்பர்க் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இப்படி, அதானி குழுமத்துடன் சாங் சங் லிங்கின் மகன் சம்பந்தப்பட்டிருக்கும் நிலையில், ஆனால் அதுகுறித்த எந்தவித தொடர்பையும், அதுகுறித்த பணப் பரிமாற்ற விவரங்களையும் அதானி குழுமம் பதிலளிக்கவில்லை என ஹிண்டன்பர்க் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஹிண்டன்பர்க், கடந்த 24ஆம் தேதி அதானி குழும நிறுவனதுக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டை முன்வைத்து நீண்ட ஆய்வறிக்கையை வெளியிட்டது. நிதி மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப் பரிமாற்றம் உள்ளிட்ட பல மோசடிகளில் பல ஆண்டுகளாக அதானி குழுமம் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க நிறுவனம் தெரிவித்தது. அந்த அறிக்கையில் 88 கேள்விகள் முன்வைக்கப்பட்டிருந்தது. இது அதானி குழுமத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், ’ஹிண்டன்பர்க் வெளியிட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை’ என்று மறுத்து அதானி குழுமம் அறிக்கை வெளியிட்டது.
மேலும், ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என்றும் அறிவித்தது. அதற்கு பதிலளித்து ஹிண்டன்பர்க் மறு அறிக்கை வெளியிட்டது. அதில் `வழக்கை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம்’ எனவும் `மோசடிகளை மறைக்க தேசியவாதத்திற்குள் ஒளிந்துகொள்ள வேண்டாம்’ எனவும் அது தெரிவித்திருந்தது. ஹிண்டன்பர்க்கின் அடுத்தடுத்த அறிக்கைகளால், அதானி குழும பங்குகள் மோசமான சரிவை சந்தித்ததுடன், பணக்காரர்கள் பட்டியலில் இருந்தும் அதானி 11வது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM