வீட்டிற்கு தாமதமாக வந்ததைக் கேள்வி கேட்ட கணவன் மீது மனைவி ஆசிட் அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் கூப்பர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த தப்பு குப்தா என்பவரின் மனைவி பூனம், வெளியே சென்றுவிட்டு இரவு தாமதமாக வீட்டிற்கு வந்துள்ளார்.
வீட்டில் இருந்த கணவர் தாமதமாக வந்ததற்கான காரணத்தை கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கணவர், மனைவியை கடுமையாக தாக்கியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பூனம் வீட்டின் குளியல் அறையில் இருந்த ஆசிட்டை கணவன் முகத்தில் அடித்தார். இதில் எரிச்சல் தாங்காமல் அவர் அலறியுள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகே இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர்.
தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதைக்கு அடிமையான தப்பு குப்தா தினமும் குடித்து விட்டு வந்து மனைவியை அடித்து தகராறு செய்து வந்துள்ளார்.
அதில் ஆத்திரம் அடைந்ததால் கணவன் மீது ஆசிட் வீசியது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in