விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அருகே வத்திராயிருப்பில் தனியார் சங்கத்தின் சார்பில் பள்ளி ஒன்றில் புத்தகத் திருவிழா தொடங்கி வைக்கப்பட்டது. இந்தப் புத்தக திருவிழாவை விருதுநகர் மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், பள்ளி மாணவர்களிடையே கலந்துரையாடினார்.
“அரசியலமைப்பு சட்டத்தால்தான் கல்வி என்பது கிராமத்திலும் கூட தனது கடையை திறந்துள்ளது. அரசியலமைப்பு சட்டத்தால்தான் நான் மாவட்ட முதன்மை நீதிபதியாக அமர்ந்து உள்ளேன்.
அரசியலமைப்பு சட்டத்தால்தான் அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வியை தர வேண்டும் என்ற உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. அரசியல் என்பது அந்நியமல்ல. அரசியல் தான் நமது வாழ்க்கை. அரசியலில் இருந்து நாம் ஒரு நாளும் நழுவாமல் நடைபோட வேண்டும். அரசியல் என்பது நமக்கானது. நாம்தான் அரசியலை தீர்மானிக்கிறோம். இதனால் நமக்கு அரசியல் தெரியவேண்டும். அதனால் அரசியல் எனக்குப் பிடிக்கும்” எனப் பேசினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.