அகமதாபாத்திலுள்ள காந்திநகர் செஷன்ஸ் நீதிமன்றம், ஆசாராம் என்னும் சாமியாருக்கு பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்டதற்காக, ஆயுள் தண்டனை விதித்திருக்கிறது. 2013-ம் ஆண்டு இந்த சாமியாரிடம் சீடராக இருந்த பெண் ஒருவர், தொடர்ந்த வழக்கில், ஆசாராம் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், தற்போது அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
2013-ம் ஆண்டு சிறுமி ஒருவரை ராஜஸ்தானிலுள்ள அவரது ஆசிரமத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக, ஏற்கெனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு ஜோத்பூர் சிறைச்சாலையில் இருக்கிறார் 81 வயதான ஆசாராம். இந்த நிலையில், தற்போது அவருக்கு மேலும் ஓர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
சாமியார் ஆசாராமின் சீடராக இருந்த பெண் ஒருவர், கடந்த 2013-ம் ஆண்டு அவர் மீது புகாரளித்திருந்தார். அந்தப் பெண், “அகமதாபாத்துக்கு அருகேயுள்ள மோடீரா என்னும் இடத்தில் அமைந்திருக்கும் ஆசாராமின் ஆசிரமத்தில், கடந்த 2001 முதல் 2006 வரை தங்கியிருந்தேன். அப்போது, ஆசாராம் என்னிடம் பலமுறை பாலியல் வன்முறையில் ஈடுபட்டார்” எனக் கூறியிருந்தார். மேலும், ஆசாராம் உட்பட ஏழு பேர் மீது அந்தப் பெண் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில், 2014-ம் ஆண்டு போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில்தான், தற்போது காந்திநகர் செஷன்ஸ் நீதிபதி டி.கே.சோனி, இந்த வழக்கில் ஆசாராம் குற்றவாளி என்று தீர்ப்பளித்திருக்கிறார். மேலும், இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால், ஆசாராம் தவிர்த்துக் குற்றம்சாட்டப்பட்ட பிறர் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.