அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 10 பேர் காயமடைந்துள்ள நிலையில், ஒரே மாதத்தில் இதுவரை மூன்று துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
4 பேர் துப்பாக்கிச் சூடு
குறித்த சம்பவம் ஃப்ளோரிடா மாகாணத்தின் ப்ளம் நகரில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.43 மணிக்கு நடந்துள்ளது.
சம்பவ இடத்தில் நின்றிருந்த ஒரு நீல நிற காரில் இருந்த 4 பேர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அந்தக் காரின் 4 ஜன்னல்களும் ஒரே நேரத்தில் இறக்கிவிடப்பட்டு துப்பாக்கிச் சூடு ஒரே நேரத்தில் நடத்தப்பட்டுள்ளது.
ஆண்களைக் குறிவைத்தே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. பின்னர் நிகழ்விடத்திலிருந்து அந்தக் கார் வேகமாக சென்றுள்ளது.
சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய அந்தக் காரை தேடி வருவதாக லேக்லேண்ட் காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 21ம் திகதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அருகே மான்டெரி பார்க் நகரில் துப்பாக்கிச் சூடு முன்னெடுக்கப்பட்டது.
ஆசிய மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில், ஆயிரக்கணக்கானோர் ஒன்றாகக்கூடி சீன புத்தாண்டை கொண்டாடிக் கொண்டிருந்தபோது இந்த துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
647 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்
தொடர்ந்து ஜனவரி 23ம் திகதி வடக்கு கலிபோர்னியா, அயோவா, சான் பிரான்சிஸ்கோ உள்பட 3 இடங்களில் நடந்த வெவ்வேறு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 2 மாணவகள் உள்பட 9 பேர் பலியாகினர்.
தற்போது ஃப்ளோரிடாவில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில் 10 பேர் காயமடைந்துள்ளனர். 2023ம் வருடம் பிறந்து ஒரே மாதத்தில் 3 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன.
அமெரிக்காவில் கடந்த 2022ஆம் ஆண்டு மட்டும் 647 பெரும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. துப்பாக்கி வன்முறை ஆவண காப்பக தகவலின்படி 2022ல் அமெரிக்கா முழுவதும் துப்பாக்கி சூட்டில் மட்டும் 44 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் தற்கொலையால் இறந்தவர்கள் என கூறுகின்றனர்.