ஆந்திரா மாநிலத்தின் புதிய தலைநகராக விசாகப்பட்டினம் அமைக்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற சர்வதேச தூதரக கூட்டமைப்பு கூட்டத்தில் பேசிய அவர் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.
“எங்கள் தலைநகராக இருக்கும் விசாகப்பட்டினத்திற்கு உங்களை அழைக்க வந்துள்ளேன். நானும் விசாகப்பட்டிக்கு மாறுகிறேன். ஆந்திராவில் வணிகம் செய்வது எவ்வளவு எளிது என்பதை நீங்களே பார்க்க உங்களையும் உங்கள் சகாக்களையும் விசாகப்பட்டினத்துக்கு அழைக்கிறேன்.” என்று ஜெகன் மோகன் அக்கூட்டத்தில் பேசியுள்ளார்.
முன்னதாக, ஆந்திர மாநிலத்தின் எதிர்காலம் பரவலாக்கப்பட்ட வளர்ச்சியில் உள்ளது என்பதை தெளிவுபடுத்திய ஜெகன் மோகன் ரெட்டி, விசாகப்பட்டினத்தை மாநில நிர்வாகத்தின் இடமாக முன்மொழிந்தார் என்பது கவனித்தக்கது.
ஒன்றுபட்ட ஆந்திர மாநிலம் பிரிவினைக்கு பின்னர் தெலங்கானா, ஆந்திரா என இரண்டானது. அதையடுத்து, ஆந்திர மாநிலத்துக்கு கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள அமராவதியை தலைநகராக அறிவித்து அதற்கான பணிகளை அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு மேற்கொண்டு வந்தார். இதற்காக நிலங்களும் கையகப்படுத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் நடைபெற்ற கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ள ஜெகன் மோகன், ஆந்திராவின் தற்போதைய தலைநகரான அமராவதியை சட்டப்பேரவை தலைநகராகவும், விசாகப்பட்டினத்தை நிர்வாக தலைநகராகவும், கர்னூலை சட்டத் (உயர் நீதிமன்றம்) தலைநகராகவும் ஏற்படுத்தி மாநிலத்திலுள்ள 13 மாவட்டங்களும் சம வளர்ச்சி அடைய செய்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யப்படும் ஜெகன் மோகன் என அறிவித்தார்.
ஆனால் அமராவதியில் தலைநகர் ஏற்படுத்த நிலம் கொடுத்த அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் ஆகியோர் அரசின் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். அரசின் முடிவை எதிர்த்து ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது என்பது நினைவுகூரத்தக்கது.
இந்த நிலையில், ஆந்திராவின் தலைநகரம் விசாகப்பட்டினம் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். அதன்படி, மாநில நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினம் அமைக்கப்படுவதால், மாநில ஆளுநர் மாளிகையும் அங்கிருந்தே செயல்படும். சட்டமன்றம் அமராவதியில் செயல்படும். பழைய மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து 1956 ஆம் ஆண்டு ஆந்திரப்பிரதேச மாநிலம் (ஒன்றுபட்ட ஆந்திரப்பிரதேசம்) பிரிக்கப்பட்டபோது, தலைநகராக இருந்த கர்னூலில் உயர் நீதிமன்றம் அமைக்கப்பட்டு சட்டத்தலைநகராக செயல்படும்.