நாமக்கல் மாவட்டத்தில் பல நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை அன்று வருகை புரிந்தார். இதற்காக பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், சேலம் பைபாஸிலுள்ள பொம்மைக்குட்டைமேடு பகுதியில் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழா முடியும்போது, தேசீயகீதம் ஒலிக்கப்பட்டது. அப்போது இருக்கையில் அமர்ந்தபடியே, நாமக்கல் ஆயுதப்படையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசம் போன் பேசிக்கொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது.
தேசீயகீதம் ஒலிப்பதுகூடத் தெரியாமல், மெய்மறந்து போனில் அவர் பேசிக்கொண்டிருந்ததை, அங்கிருந்த யாரோ வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. அதில், தேசியகீதம் முடியும் தறுவாயில், போன் பேசி முடித்த அவர், திடீரென எழுந்து நிற்பதும் பதிவாகியிருந்தது. உதவி ஆய்வாளரின் செயல் கடும் விமர்சனத்துக்குள்ளானதை அடுத்து, அவரை சஸ்பெண்ட் செய்து நாமக்கல் மாவட்ட எஸ்.பி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.