புதுடெல்லி,
15-வது உலகக் கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வர், ரூர்கேலாவில் கடந்த 13-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடந்தது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி 2-வது சுற்றில் பெனால்டி ஷூட்-அவுட்டில் 4-5 என்ற கோல் கணக்கில் 10-வது இடத்தில் உள்ள நியூசிலாந்திடம் தோல்வி கண்டு கால்இறுதி வாய்ப்பை இழந்து ஏமாற்றம் அளித்தது. அதன் பிறகு ஜப்பான், தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்த இந்திய அணி 9-வது இடத்தை அர்ஜென்டினாவுடன் இணைந்து பெற்றது.
1975-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி அதன் பிறகு அரைஇறுதியை கூட எட்டியதில்லை. சொந்த மண்ணில் நடைபெற்ற இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்தியா பதக்க மேடையில் ஏறும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அணியின் செயல்பாடு பேரிடியாக அமைந்தது. இதனால் இந்திய அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் உலகக் கோப்பை போட்டி தோல்வி எதிரொலியாக இந்திய ஆக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் கிரஹாம் ரீட் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த 58 வயதான கிரஹாம் ரீட் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அவரது பதவி காலம் அடுத்த ஆண்டு (2024) ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டி வரை இருந்தது. ஆனால் அதற்குள் அவர் தனது ஒப்பந்தத்தை முறித்து கொண்டுள்ளார்.
கிரஹாம் ரீட் பயிற்சியில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி வெண்கலப்பதக்கம் வென்றது. அதாவது 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் பதக்கத்தை முத்தமிட்டது. அத்துடன் கடந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வெள்ளிப்பதக்கமும், 2021-22-ம் ஆண்டுக்கான புரோ ஆக்கி லீக் போட்டியில் 3-வது இடமும், 2019-ம் ஆண்டு சர்வதேச ஆக்கி சம்மேளன சீரிஸ் இறுதி சுற்றில் சாம்பியன் பட்டமும் வென்றது.
கிரஹாம் ரீட்டுடன் இணைந்து பயிற்சியாளர்கள் கிரேக் கிளார்க் (பகுப்பாய்வு பயிற்சியாளர்), மிட்செல் டேவி பெம்பெர்டன் (நவீன தொழில்நுட்ப ஆலோசகர்) ஆகியோரும் தங்கள் பதவியை துறந்து இருக்கிறார்கள். இவர்கள் 3 பேரின் ராஜினாமாவை ஆக்கி இந்தியா அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது.
ராஜினாமா குறித்து கிரஹாம் ரீட் கருத்து தெரிவிக்கையில், ‘தற்போது நான் பதவியில் இருந்து விலகி அடுத்த நிர்வாகத்திடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டிய நேரமாகும். இந்திய அணி மற்றும் ஆக்கி இந்தியாவுடன் இணைந்து பணியாற்றியதை கவுரவமாகவும், பாக்கியமாகவும் கருதுகிறேன். இந்த வரலாற்று பயணத்தில் ஒவ்வொரு தருணத்தையும் நான் அனுபவித்தேன். இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள்’ என்றார்.
ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட பிறகு ஆக்கி இந்தியா தலைவர் திலிப் திர்கே கூறுகையில், ‘நாட்டுக்கு குறிப்பாக ஒலிம்பிக் போட்டிகளில் நல்ல முடிவை கொண்டு வந்த கிரஹாம் ரீட் மற்றும் அவரது உதவி ஊழியர்கள் குழுவுக்கு இந்தியா எப்போதும் நன்றியுடன் இருக்கும். எல்லா பயணங்களும் வெவ்வேறு நிலைகளை நோக்கி நகரும். எங்கள் அணி புதிய அணுகுமுறையை நோக்கி நகருவதற்கான நேரம் இதுவாகும் ‘என்றார்.