லக்னோ: உத்தர பிரதேசம் கோரக்பூரில் புகழ்பெற்ற கோரக்நாத் கோயில் அமைந்துள்ளது. அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், கோயிலின் மடாதிபதியாக இருக்கிறார். கடந்த ஆண்டு ஏப்ரலில் அவர் கோயிலில் சுற்றுப் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார்.
அவரது பயணத்துக்கு ஒருநாள் முன்னதாக கடந்த ஏப்ரல் 3-ம் தேதி கோரக்நாத் கோயிலுக்குள் ஆயுதத்துடன் நுழைந்த மர்ம நபர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் அனில் குமார் மீது திடீர் தாக்குதல் நடத்தினார். மர்ம நபரை போலீஸார் மடக்கி பிடித்தனர்.
தாக்குதல் நடத்திய மர்ம நபர் கோரக்பூரை சேர்ந்த அகமது முர்டாசா அப்பாஸ் என்பது விசாரணையில் தெரியவந்தது. கடந்த 2015-ம் ஆண்டில் மும்பை ஐஐடியில் கெமிக்கல் இன்ஜினீயரிங் பட்டம் பெற்ற அவர், ஐ.எஸ். தீவிரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கை லக்னோவில் உள்ள தேசிய விசாரணை முகமை (என்ஐஏ) நீதிமன்றம் விசாரித்தது. நீதிபதி விவேகானந்தா சரண் திரிபாதி 10 மாதங்களில் வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கினார். இதன்படி குற்றவாளி அகமது முர்டாசா அப்பாஸுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து அவரது தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.