உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை! 'கட்டாய மத மாற்றம்.. 10 ஆண்டுகள் சிறை' –

“உத்தர பிரதேச மாநிலத்தில், கட்டாய மத மாற்றத்தில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்படும்,” என, அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து உள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையில் உள்ள ஜல்கான் மாவட்டத்தில் உள்ள ஜாம்னரில் நடந்த நிகழ்ச்சியில், உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:

நாம் சாதி மற்றும் பிராந்திய பாகுபாடுகளை ஒழிக்க வேண்டும். இதை அடுத்து நமது முன்னேற்றத்தை தடுக்க, யாராலும் தடுக்க முடியாது. உத்தர பிரதேச மாநிலத்தில் சட்ட விரோதமாக மதம் மாற்றுவதை தடுக்கும் சட்டம், 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வந்தது. சிலர் மத மாற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதனை தடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

உத்தர பிரதேச மாநிலத்தில் தற்போது யாரும் மத மாற்றத்தில் ஈடுபட முடியாது. அவ்வாறு செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், ஒரு குற்றவாளி 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். சனாதன தர்மம் இந்தியாவின் தேசிய மதம். அதை ஒவ்வொரு குடிமகனும் மதிக்க வேண்டும். சனாதன தர்மம் என்றால் மனிதநேயம் என்று பொருள்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி பெற்றுள்ளது. டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையின் முகலாய தோட்டத்தின் பெயரை ‘அம்ருத் உதான்’ என்று மத்திய அரசு மாற்றியுள்ளது. அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் அமைக்கப்பட

உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

பாஜக ஆட்சி உள்ள கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கட்டாய மத மாற்றத்திற்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.