ஏழைகளின் கடவுள் என்று இரண்டு மாவட்ட மக்களால் போற்றப்பட்ட பட்டுக்கோட்டை மருத்துவர் பாஸ்கரன் உயிரிழந்த சம்பவம், அங்கு சுற்றியுள்ள மக்களை சோகத்தில் ஆழ்த்திய நிலையில், சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் திரளாக வந்து மௌன அஞ்சலி செலுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (58). 1990ஆம் ஆண்டு முதல் கடந்த வாரம் வரை ஏழை எளிய மக்களுக்காகவே மருத்துவச் சேவை செய்து வந்தார். இவர் மேற்கொண்டு வந்த மருத்துவ சேவையால் பல்லாயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும் நிலையில், அவரை அப்பகுதி மக்கள் ஏழைகளின் கடவுளாகவே போற்றி வந்தனர். இந்நிலையில் நேற்று மருத்துவர் பாஸ்கரன் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம், அவரால் உயிர்பிழைத்த ஆயிரக்கணக்கான மக்களையும் கண்ணீரில் உறைய வைத்துள்ளது.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்த அவர், பட்டுக்கோட்டையிலும் தனது மருத்துவமனையின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இந்நிலையில் பாஸ்கரன் திடீரென்று உயிரிழந்த சம்பவம், தஞ்சை மற்றும் புதுக்கோட்டை ஆகிய இரண்டு மாவட்ட மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சூழலில் இன்று புதுக்கோட்டை மாவட்ட கீரமங்கலத்தில் 500க்கும் மேற்பட்ட மக்கள், மறைந்த மருத்துவருக்காக அமைதி ஊர்வலத்தில் பங்கேற்று மௌன அஞ்சலி செலுத்தினர்.
இன்று தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் அவரது இறுதி ஊர்வலம் நடைபெற்ற அதே சூழலில், புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் 500க்கும் மேற்பட்ட மக்கள் ஏழைகளின் மருத்துவர் பாஸ்கரனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நகரின் முக்கிய வீதிகளில் மௌன ஊர்வலமாக சென்று தங்களது துயரத்தை வெளிப்படுத்தியதோடு, பின்பு பேருந்து நிலையம் அருகே இரங்கல் கூட்டமும் நடத்தி அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
மருத்துவர் பாஸ்கரனை பொறுத்தவரையில், தனது மருத்துவ சேவையை தொடங்கிய காலத்தில் இருந்து இதுவரையில் ஏழை எளிய மக்களுக்காக சேவை செய்தும், ஒரு அரசு மருத்துவராக மட்டுமல்லாமல் பட்டுக்கோட்டையில் ஒரு கிளினிக்கை தொடங்கி அங்கு வரும் ஏழை மக்களுக்கு பணம் எதிர்பார்ப்பின்றி குறைந்த செலவில் மருத்துவம் செய்தும் வந்துள்ளார். தனது வாழ்நாளில் புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களை மருத்துவம் பார்த்து காப்பாற்றி உள்ள அவரின் சேவையை போற்றும் வகையில், இன்று கீரமங்கலத்தில் ஒன்றிணைந்து அமைதி ஊர்வலத்தை நடத்தியதாக திரளாக குவிந்த மக்கள் தெரிவித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM