முழங்காலில் காயம் அடைந்த பயணியை அழைத்துச் செல்ல அடிப்படையான ஒரு சக்கர நாற்காலி கூடவா உங்களிடம் இல்லை? என்று, ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருப்பவர் நடிகை குஷ்பூ. இவர், சென்னை விமான நிலையத்தில் அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் பெயரை டேக் செய்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “முழங்காலில் காயம் அடைந்த பயணியை அழைத்துச் செல்ல அடிப்படையான ஒரு சக்கர நாற்காலி கூடவா உங்களிடம் இல்லை?.
வேறு ஒரு விமான நிறுவனத்திடம் இருந்து சக்கர நாற்காலியை கடனாக பெற்று வரும் வரை, சென்னை விமான நிலையத்தில் அரை மணிநேரம் காயத்துடன் காத்திருந்தேன். இதனை விட நல்ல முறையில் நீங்கள் சேவை செய்ய முடியும் என என்னால் உறுதி கூற முடியும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை குஷ்புவுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் மன்னிப்பு கோரப்பட்டுள்ளது. இதுகுறித்து அதன் டிவிட்டர் பக்கத்தில், ‘உங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களுக்காக நாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த விவகாரம் உடனடியாக சென்னை விமான நிலைய குழுவுக்கு எடுத்து செல்லப்படும்’ எனத் தெரிவித்துள்ளது.