கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பேரண்டப்பள்ளி அருகே, பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், ஒரு லாரி பல மணி நேரமாக நிற்பதாகவும், லாரியை ஓட்டி வந்த டிரைவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாகவும் இன்று, அட்கோ போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், டிரைவர் சடலத்தை மீட்டு விசாரித்ததில், லாரியை ஓட்டி வந்தது சென்னை, அருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த லோகநாதன் (50) என்பது தெரியவந்தது.
லாரியை போலீஸ் ஸ்டேஷன் எடுத்து சென்று சோதனை செய்ததில், சாக்குப்பைகளில் நிறைய மூட்டைகள் இருந்தன. அவற்றைப் பிரித்துப் பார்த்தபோது ஒவ்வொரு மூட்டையிலும், ரேஷன் அரிசி இருந்தது கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். அந்த லாரியில், 50 கிலோவுக்கு மேல் எடையுள்ள மூட்டைகளாக கட்டப்பட்டு, 390 மூட்டைகளில், 20 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. பெங்களூருவுக்கு இந்த ரேஷன் அரிசியைக் கடத்த முயன்றது யார், எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, லாரியின் உரிமையாளர் யார் என, போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
அட்கோ இன்ஸ்பெக்டர் தங்கவேலிடம் இது தொடர்பாகப் பேசினோம். “பெங்களூர் பைபாஸ் ரோட்டோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு, மாரடைப்பால் டிரைவர் இறந்துவிட்டார். கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி, லாரியை பறிமுதல் செய்து, உணவுப் பொருள்கள் கடத்தல் தடுப்புப் பிரிவில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. அரிசி கடத்தியது யார், லாரி உரிமையாளர் யார் என்பது குறித்து விசாரிக்கிறோம்’’ என்றார்.