ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா மார்ச் 3, 4-ம் தேதிகளில் நடைபெறவிருக்கிறது. இதையொட்டி இலங்கை யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜோசப்தாஸ் ஜெபரெத்தினம் விழா அழைப்பிதழை, ராமேஸ்வரம் பங்குத்தந்தை தேவசகாயத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
இது குறித்து ராமேஸ்வரம் பங்குத்தந்தையும், கச்சத்தீவு திருப்பயண ஒருங்கிணைப்பாளருமான தேவசகாயம் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசியவர், “கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவுக்கான முறையான அழைப்பிதழ் வந்திருக்கிறது. மார்ச் 3-ம் தேதி காலை ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து படகுகள் புறப்படும். அன்று வெள்ளிக்கிழமை மாலை கச்சத்தீவில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கும். தொடர்ந்து ஆராதனை, சிலுவைப்பாதை, திருப்பலி, தேர்பவனி நிகழ்ச்சிகள் நடைபெறும். மறுநாள் மார்ச் 4-ம் தேதி சனிக்கிழமை காலை கூட்டுத் திருப்பலி, சிறப்பு பிரார்த்தனையுடன் விழா நிறைவுபெறும்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸிடம் கச்சத்தீவு திருவிழா திருப்பயணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டிக் கேட்டிருக்கிறோம். இந்த ஆண்டு விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் என மொத்தம் 60 படகுகளில் அதிகபட்சம் 3,000 பக்தர்கள் வரையிலும் கச்சத்தீவுக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்படவிருக்கிறது. விசைப்படகில் படகோட்டிகள் உள்ளிட்ட 40 பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். கச்சத்தீவு செல்ல விரும்பும் பக்தர்கள் தாங்களே நேரடியாக வேர்க்கோட்டிலுள்ள ஆலயத் திருப்பயண அலுவலகத்தில் பதிவுசெய்ய வேண்டும்.
இதற்கான விண்ணப்பங்கள் பிப்ரவரி 2, பிப்ரவரி 3 ஆகிய இரண்டு நாள்கள் வரை வழங்கப்படும். பயணிகள் ஆதார் அட்டை நகல், மூன்று பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் மற்றும் காவல்துறையினரின் தடையில்லாச் சான்று ஆகிய ஆவணங்களை இணைத்து, 2,000 ரூபாய் கட்டணத்துடன் விண்ணப்பத்தை பிப்ரவரி 10-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
கடந்த ஆண்டுகளைப் போல இல்லாமல், இந்த முறை படகு உரிமையாளர்கள் தங்கள் படகுகளை மட்டும் பதிவுசெய்து கொள்ள வேண்டும். படகு உரிமையாளர்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எத்தனை விண்ணப்பங்கள் வேண்டம் எனக் கேட்கிறார்களோ அவை மட்டுமே கொடுக்கப்படும். மற்றபடி கச்சத்தீவு திருப்பயண அலுவலகத்தில் விண்ணப்பிக்கும் பக்தர்களை அந்தந்த படகுகளுக்கு நாங்கள்தான் அனுப்பிவைப்போம். இது குறித்து மீனவர் சங்க பிரதிநிதிகளிடம் கூறியபோது, அவர்கள் ஒத்துழைக்கவில்லை. ஆனால் எங்களுடைய முடிவில் நாங்கள் ஆணித்தரமாக இருக்கிறோம். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிக கட்டணம் வசூலித்தால், அந்த மீனவர் சங்கம் அடுத்த ஆண்டு கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவில் பங்கேற்பது நிறுத்தப்படும். எனவே இந்திய-இலங்கை இருநாட்டு உறவுகளும் சங்கமிக்கும் இந்த திருவிழாவில் உறவுகளை மதிக்கும் உன்னத நோக்கத்துடனும் பங்கேற்க அழைக்கிறோம்” என்று தெரிவித்தார்.