கடலூர்: நீர்த்தேக்க தொட்டியில் அழுகிக் கிடந்த சடலம்; குடிநீரைப் பயன்படுத்திய மக்கள் அதிர்ச்சி!

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த ராஜேந்திரபட்டிணம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் சிவசங்கரன். இவர் மகன் சரவணக்குமார் பொறியியல் பட்டதாரி. கடந்த 10 நாள்களுக்கு முன்பு வீட்டில் யாரிடமும் சொல்லாமல் திடீரென மாயமாகியிருக்கிறார் சரவணக்குமார்.

சரவணக்குமார்

அதையடுத்து பல்வேறு இடங்களில் தேடியும் சரவணக்குமார் கிடைக்காததால், அவர் பெற்றோரும், உறவினர்களும் கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சரவணக்குமாரின் புகைப்படத்தைக் கொண்டு போலீஸார் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் ராஜேந்திரப்பட்டிணம் கிராமத்தின் பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் இன்று மாலை துர்நாற்றம் வீசியிருக்கிறது.

நீர்த்தேக்க தொட்டி

அதில் சந்தேகமடைந்த அந்தப் பகுதி மக்கள், குடிநீர் விநியோகிக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறி பார்த்தனர். அப்போது அங்கு காணாமல்போன சரவணக்குமார் அழுகிய நிலையில் சடலமாக கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர். உடனே காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். அதையடுத்து தீயணைப்புத்துறையினருடன் அங்கு விரைந்த கருவேப்பிலங்குறிச்சி போலீஸார், குடிநீர் தொட்டியில் இருந்த சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரவணக்குமார் மர்ம மரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அந்த குடிநீரைப் பயன்படுத்திய அந்தப் பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். உயிரிழந்த சரவணக்குமார் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.